சேலம் மாநகர காவல் துறை சார்பில் இன்று மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் சேலம் மாநகரில் உள்ள பெண் காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், பெண் காவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி தலைமையில் நடைபெற்றது. சேலம் மாநகர வடக்கு காவல் துணை ஆணையர் லாவண்யா, சேலம் மேற்கு காவல் துணை ஆணையர் மாடசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் காவல் ஆணையர் விஜயகுமாரி கேக் வெட்டி அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.



இதனைதொடர்ந்து மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி பேசும்போது , "ஆண்களுக்கு நிகராக பெண்களும் வளர வேண்டும் என்ற வகையில் தான் மகளிர் தின விழாக்கள் கொண்டாடப்படுகிறது. தற்போது அரசாங்கமே பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்று சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அரசு பணிகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. எனவே பெண்கள் இதனை பயன்படுத்தி தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். பெண்களின் தியாகத்தை மட்டுமே நாம் கூறி வரும் ஆண்கள், அவர்களின் சுமையை குறைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். பெண்களை மதிக்க வேண்டும்" என்று கூறினார். 


தொடர்ந்து பேசிய அவர், "வீட்டில் பெண் குழந்தைகளுக்கு எவ்வாறு மரியாதை தர வேண்டும் என்பதை மற்ற குழந்தைகளுக்கு நாம் கற்றுத் தர வேண்டும். பெண் குழந்தைகளின் மீதான மதிப்பு இளைஞர்கள் மத்தியில் வளரும் போது போக்சோ வழக்குகள் பெரும்பாலும் குறையும். ஒவ்வொரு வீட்டிலும் பெண் குழந்தைகள் மீதான மதிப்பு பெருகும் போது பெண்களுக்கான பாதுகாப்பு தானாக வரும். பெண் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை கூறி பெற்றோர் வளர்க்க வேண்டும்" என்றும் கூறினார்.


பெண்கள் பெரிய பெரிய பொறுப்புகளுக்கு வருவதற்கு ஆண்கள் தான் காரணம் என்று கூறியவர், இந்த மகளிர் தினத்தில் நாம் அனைவரும் ஆண்களுக்கு நன்றியை செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பணி செய்யும் பெண்கள் தங்கள் குடும்பத்தையும், பணியையும் சரிசமமாக பாவித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி கேட்டுக் கொண்டார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண