சேலத்தில் தீண்டாமை வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்ற திறப்பு விழா நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் தனி நீதிமன்றத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இளந்திரையன், மஞ்சுளா கலந்து கொண்டனர். சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ.2.5 கோடி மதிப்பில்  தீண்டாமை மற்றும் எதிரான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் கட்டப்பட்டுள்ளது. இதே போன்று, 32 வழக்கறிஞர் அறைகள், சேலம் மாவட்டம் ஆத்தூரில் கூடுதல் நீதிமன்றம் கட்டப்பட்டுள்ளது. புதிய நீதிமன்றத்தினை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியன் திறந்து வைத்தார். சேலம் மாவட்டம் ஆத்தூர் கூடுதல் நீதிமன்றத்தை காணொளி வாயிலாகவும் உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இளந்திரையன், மஞ்சுளா, மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், "வட்டார தலைநகரங்களில் இருந்து மாவட்ட தலைநகருக்கு செல்வதால் பொதுமக்களுக்கு ஏற்படும் நேர விரையும் மற்றும் அலைச்சலை தடுக்கும் வகையில் கூடுதல் நீதிமன்றங்கள் திறக்கப்படுகின்றன. சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்திற்கு பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் செல்லும் அலைச்சலை தவிர்க்கும் வகையில் ஆத்தூரில் கூடுதல் நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து 422 வழக்குகள் ஆத்தூர் கூடுதல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஆத்தூர் பகுதி மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வழக்கறிஞர்கள் துணை நிற்க வேண்டும். நீதிமன்றங்களுக்கு சென்றால் நீதி கிடைக்க பத்து முதல் 15 வருடங்கள் ஆகும் என பொதுமக்கள் கூறுகின்றனர். இதனை கேட்டால் வழக்கறிஞர்கள் தொடங்கி நீதிபதிகள் நீதிமன்ற ஊழியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் வலி ஏற்பட வேண்டும். இதற்கு நாம் தான் காரணம் என்பதை உணர்ந்து அதற்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கறிஞர்களின் பணி நீதிமன்றத்தோடு முடிவடைந்து விடுவதில்லை அவர்களுக்கு கூடுதல் சமூகப் பொறுப்பு உள்ளது. ஆதரவற்றவர்கள், நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க வழக்கறிஞர்கள் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து வழக்கறிஞர்களும் தங்களது அலுவலகத்திற்கு கட்டாயம் வாடகை வழங்க வேண்டும். பொதுமக்களிடையே ஒரு அவப்பெயர் உண்டு, வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் வீடு வாடகைக்கு விட அச்சப்படுகிறார்கள். சட்டம் பயின்றவர்கள் பொதுமக்கள் மத்தியில் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை அனைத்து தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் பேசினார்.



தொடர்ந்து பேசிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன், "இளம் வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்களிடமிருந்து எந்தவித தயக்கமும் இன்றி வாத திறமை நீதிமன்ற நடைமுறைகள் என எல்லாவற்றையும் முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும். புதிய நீதிமன்றங்கள் திறப்பு மகிழ்ச்சியளிக்கிறது. எனினும் குடும்ப நல நீதிமன்றங்கள் தீண்டாமை மற்றும் வன்கொடுமைக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்றங்களில் வழக்குகள் இல்லை என்ற நிலையை சமுதாயத்தில் உண்மையான மகிழ்ச்சியை உருவாக்கும். இது போன்ற நீதிமன்றங்கள் செயல்படாத நாளையே சமுதாயம் மகிழ்ச்சியாக பார்க்கக்கூடிய நிலை உள்ளது குடும்ப நல வழக்குகளை விசாரிக்கும் போது வேதனையாக உள்ளது. சகிப்புத்தன்மை வேகமாக குறைந்த வருவதன் அடையாளமாக குடும்ப நல நீதிமன்றங்களில் அதிக அளவிலான வழக்குகள் தாக்கல் ஆகின்றன 1986 ஆம் ஆண்டு வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே குடும்ப நல வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னையில் உள்ள 8 குடும்ப நல நீதிமன்றங்களில் 56 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது வேதனை அளிப்பதாக உள்ளது. பெரிய வரும் மக்கள் தொகையில் இது குறைவான எண்ணிக்கை தான் என்றாலும் குடும்ப நல வழக்குகள் மற்றும் சிறப்பு வழக்குகளில் வழக்கறிஞர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் இது போன்ற வழக்குகள் குறையும் இதை சமூக சேவையாக கருதி வழக்கறிஞர்கள் மேற்கொள்ள வேண்டும். மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்களை தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு தொடர் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து வழக்காடும் தன்மையை கற்றுக் கொடுக்க வேண்டும்" என்று பேசினார்.