சேலம் மாநகர் தொங்கும் பூங்காவில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, பேரூராட்சிகள் துறை, நகராட்சிகள் துறை, மாநகராட்சி, எரிசக்தித் துறை, மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கூட்டுறவுத் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகளின் வாயிலாக 1,673 பயனாளிகளுக்கு ரூ.7.82 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.



நிகழ்ச்சிகள் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "சில நாள்களுக்கு முன் செய்தித்தாள் மூலம் ஒரு செய்தியை படித்தேன். பட்டா மாறுதல் வேண்டும் என்று ஒரு நபர் 28 ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சி செய்திருக்கிறார். தற்போது "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம் மூலம் மனு அளித்த ஒரே நாளில் மனுதாரருக்கு பட்டா மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. "மக்களுடன் முதல்வர்" திட்டமானது பொதுமக்களின் மனுக்களுக்கு விரைந்து தீர்வுகாணும் வகையிலான சிறப்பான திட்டமாக அமைந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் சேலம் மாவட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் மாதம் ரூ. 1,000 வீதம் 5.50 இலட்சம் மகளிருக்கு உதவித்தொகையும், காலை உணவுத் திட்டத்தின் மூலம் 1,504 பள்ளிகளில் பயிலும் 99,690 மாணாக்கர்களுக்கு காலை உணவும் வழங்கப்படுகிறது. மேலும், மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தின் மூலம் 18.91 கோடி மகளிர் பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000 வீதம் 24,933 மாணவிகளுக்கு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 82,837 மாணவ, மாணவிகளுக்கு திறன் பயிற்சிகளும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 29,51,068 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5 வகையான நோய்கள் கண்டறியப்பட்டு, 6,91,435 நபர்களுக்கு சிகிச்சைகளும், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் மூலம் 12,305 நபர்களும் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.



மேலும், 10,29,553 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இதுவரை பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.209.11 கோடி ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புகளும், 76,031 புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், 7,436 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், முதல்வரின் முகவரித் துறையின் மூலம் பெறப்பட்ட 1,42,454 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நமக்கு நாமேத் திட்டத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் ரூ. 52.71 கோடி மதிப்பில் 339 பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.96.53 கோடி மதிப்பில் சேலம், பழைய பேருந்து நிலையமும், ரூ. 28.59 கோடி மதிப்பில் பள்ளப்பட்டி ஏரியும் புனரமைக்கப்பட்டுள்ளது. மேலும், அய்யந்திருமாளிகை பள்ளி வளாகத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நூலகங்கள் மற்றும் அறிவுசார் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சேலம், தம்மண்ணன் ரோடு. லீ பஜார் ரோடு, சீத்தாராமன் ரோடு ஆகியவை ரூ.34 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் போடிநாயக்கன்பட்டி ஏரி, அல்லிக்குட்டை ஏரி மற்றும் மூக்கனேரி ஆகிய 3 நீர்நிலைகளில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள ரூ.52 கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ரூ.548 கோடி மதிப்பீட்டில் 520 கி.மீ நீளத்திற்கு பாதாள சாக்கடை திட்டப் பணிகளும் நடைபெற்று வருகிறது. விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் மூலம் ரூ.26.52 கோடி மதிப்பீட்டில் 53,336 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளும், "எண்ணும், எழுத்தும்" திட்டத்தின் மூலம் 1,75,165 மாணவ, மாணவிகளும், "இல்லம் தேடிக் கல்வி" திட்டத்தின் மூலம் 10,589 மையங்கள் தொடங்கப்பட்டு. 1,16,128 மாணவ, மாணவிகளும் பயனடைந்துள்ளனர். மேலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 51,748 பயனாளிகளுக்கு ரூ.2.11 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளன. கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் மூலம் 192 முகாம்கள் நடத்தப்பட்டு, 1,84,769 நபர்கள் பயனடைந்துள்ளனர். இதுதவிர பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதல்வர் சேலம் மக்களின் நலனுக்காக சாலைப் பணிகள், பாலப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, சேலம் மாநகராட்சிக்கு அதிகளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெறுகிறது என்றும் கூறினார்.