சேலம் மாவட்டம் மேச்சேரியில் சிறந்த நெசவாளர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மேச்சேரி வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நெசவாளர்கள் தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து நெசவாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய நெசவாளர்கள் சேலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் நெசவுத் தொழில் ஈடுபட்டு வருவதாகவும், இதில் 73 சதவீதம் பேர் மகளிர் இருப்பதாகவும் கூறினார். மேலும் 30 ஆயிரம் பேர் மறைமுகமாக நெசவுத் தொழில் மூலம் பயனடைந்து வருவதாகவும் கூறினர். சேலம் பகுதி நெசவாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 


நெசவாளர்கள் தெரிவித்த கோரிக்கைகள் மீது மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதியளித்தார்.



இதைத்தொடர்ந்து, மேச்சேரியில் அகில இந்திய கைத்தறி நெசவாளர்கள் நல சங்கம் சார்பில் நெசவாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் சிறந்த நெசவாளர்கள் 100 பேருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விருதுகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். மேச்சேரி கிராமத்தினர் அளித்த அன்பும், வரவேற்பும் மனதை நெகிழச் செய்து விட்டது. ஏன் இந்தப் பகுதிக்கு நீண்ட காலமாக வராமல் போய்விட்டதை நினைத்து வருந்துகிறேன். மனித நாகரீகத்தின் முதல் அடையாளமாக ஆடை திகழ்கிறது. அனைத்து மனிதர்களுக்கும் ஆடையளிக்கும் நெசவாளர்கள் மிகவும் முக்கியமானவர்கள். நான் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் இருந்து வந்திருக்கிறேன். கிராம மக்களின் நேர்மையான அன்பும் அக்கறையும் எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். மேச்சேரி கிராம மக்கள் அளித்த அன்பு என்னுடைய சிறுவயதில் கிராமத்தில் இருந்த உணர்வைத் தருகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக ஜவுளிகளை உற்பத்தி செய்தவற்கும் உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும் இந்திய நாடு முன்னோடியாக திகழ்கிறது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவும் இந்தியாவில் இருந்து ஜவுளிப் பொருட்கள் பிறநாடுகளுக்கு வணிகம் செய்தது ரோம பேரரசின் குறிப்பில் உள்ளது. மிகப் பெரிய ரோமப் பேரரசு நம்முடன் விரும்பி வணிகம் செய்தது வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 55 கோடி தங்க நாணயங்கள் கொடுத்து ஜவுளிப் பொருட்கள், பட்டு சேலைகளை வாங்கியுள்ளனர். 



இன்றைக்கு நவநாகரீக காலத்தில் பல்வேறு மாற்றங்கள் நெசவாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், பிரதமர் நரேந்திர மோடி கைத்தறி நெசவாளர்களின் நலன் மீது அக்கறை காட்டி வருகிறார். இளைஞர்கள் நெசவுத் தொழிலுக்கு வருவதற்கு ஆர்வமில்லாமல் இருப்பது எனக்குத் தெரியும். நெசவுத் தொழிலுக்கு ஈடாக உலகின் சிறந்த தொழில் இல்லை. நெசவாளர்களின் கைகளால் உருவாக்கப்படும் பொருட்களின் மனிதனின் மனதை நேரடியாக சென்றடைகிறது. இளைஞர்கள் பணத்தை நோக்கி மட்டும் செல்லாமல், இந்த தொழிலை அர்ப்பணிப்போடு தொடர வேண்டும். 


நெசவாளர்கள் உருவாக்கும் ஆடைகள் மனிதர்களுக்கு மட்டுமல்லாது கடவுளுக்கு பயன்படுகிறது. அத்தகைய நெசவாளர்கள் நிறைந்த மேச்சேரிக்கு வந்தது தெய்வீக அனுபவத்தை தருகிறது. நெசவாளர்களின் கோரிக்கைகள், பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து மத்திய அரசு மற்றும் அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு நெசவாளருக்கு விருது வழங்கும் போதும், அவர்களின் எளிமை, அர்ப்பணிப்பு, தொழிலில் நேர்மை எனக்கு தெய்வீக அனுபவத்தை வழங்கியுள்ளது. மேச்சேரி மக்கள் அளித்த அனுபவம் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது என்று பேசினார்.