சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.23.75 கோடி மதிப்பில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள்நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார். 


பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த மூன்றரை ஆண்டுகளில் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அசாதாரண வளர்ச்சியடைந்துள்ளது. உணர்திறன் பூங்கா, சித்த மருத்துவப்பிரிவு, கட்டணத் தொகுதி, அம்மாபேட்டையில் புறநகர் மருத்துவமனை, இதயச் சிகிச்சைக்கான அதிநவீன கேத்லேப் திறக்கப்பட்டுள்ளது. சேலம் மருத்துவத்துறை வரலாற்றில் முதல்முறையாக 1618 பேர் கேத் லேப்-ல் சிகிச்சை பெற்றுள்ளனர். பெட் சிடி ஸ்கேன் கருவி புற்றுநோய் துல்லியமாக கண்டறியும் கருவியும் தொடங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் சென்னை மதுரையில் மட்டுமே பெட் சிடி ஸ்கேன் கருவி இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு கூடுதலாக 5 இடங்களில் பெட் சிடி ஸ்கேன் கருவி நிறுவி மொத்தம் 7 இடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. சேலம் பெட் சிடி ஸ்கேன்-ல் 1297 பேர் பரிசோதனை செய்து கொண்டுள்ளனர். புதிதாக அடிக்கல் நாட்டப்பட்டுள்ள 50 படுக்கைகள் கொண்ட அவசரசிகிச்சை பிரிவு தரமான முறையில் அடுத்த 12 மாதங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.



மேலும் சேலம் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கட்டிடங்கள், ஆத்தூர், சங்ககிரி, ஓமலூர், எடப்பாடி அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இன்று (நேற்று) ஒரே நாளில் சேலத்தில் ரூ.7 கோடி மதிப்பில் 21 புதிய மருத்துவமனைகளுக்கான கட்டிடங்கள் திறக்கப்படுகிறது. 8713 துணை சுகாதார நிலையங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது. 2286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கிறது. 3 ஆயிரம் கட்டிடங்களுக்கு மாற்றாக புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் 1100 புதிய கட்டிடங்கள் கட்டுப்பட்டுள்ளன. நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் 708 இடங்களில் அமையும் என முதலமைச்சர் அறிவித்து இருந்தார். சென்னை 21 மாநகராட்சிகள், 63 நகராட்சிகளில் இந்த நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஓராண்டில் 500 இடங்களில் நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் திறக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 208 நல்வாழ்வு மையங்கள் கட்டுமானப் பணிகள் நிறைவுற்றுள்ளது. மருத்துவப் பணியாளர்கள் நியமனம் நிறைவுற்ற பிறகு 208 நல்வாழ்வு மையங்கள் திறக்கப்படும்.



ஐநா சபை விருது மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு கிடைத்துள்ளது. 2021-ல் தொடங்கப்பட்ட திட்டம் ஒரு கோடியே 95 லட்சம் பயனாளிகளைக் கடந்து நடைபெற்று வருகிறது. எந்த மாநிலத்தில் மட்டுமல்ல, எந்த நாட்டிலும் இதுபோன்று திட்டம் இல்லை. ஏற்காடு மலைப்பகுதியில் மட்டும் 99.5 சதவீதம் பேருக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. 600 பேர் மக்கள் தொகை கொண்ட கொண்டையனூர் பகுதி கிராமத்தினருக்கும் மருந்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. மகப்பேறு மரணம் இல்லாத மகப்பேறு என்ற இலக்கை நோக்கி தமிழகம் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. அறுவைச் சிகிச்சை இன்றி சுகப்பிரசவம் மேற்கொள்ள மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை காரையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரத்தில் 5 பிரசவங்கள், சுகப்பிரசவங்களாக நடைபெற்றுள்ளது என்பது மேம்பட்ட சாதனையாகும். கர்ப்பிணிகளுக்கு யோகாப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சி வழங்கப்பட்டதன் சுகப்பிரசவம் நடைபெற்றுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் கையாண்டு வரும் இதுபோன்ற யுக்திகளை அரசு மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டும் என்றார்.