சேலத்தில் பாடத்திட்டங்களை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி,அரசு பள்ளி சீருடையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த 80 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள். மாவட்ட கல்வி அலுவலர், மாணவ மாணவிகளின் கோரிக்கைகளை தனித்தனி மனுவாக பெற்றுக்கொண்டார். கொரோனா பேரிடர் காரணமாக நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தாமதமாகவே தொடங்கப்பட்டது.
தொடர்ந்து பாடத்திட்டங்கள் இதுவரை முழுமையாக முடிக்கப்படாத நிலையில் அரசு பொதுத்தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி மற்றும் வீரபாண்டி பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மணவிகள் பொதுத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை வைக்க வந்திருந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த சேலம் மாவட்ட கல்வி அலுவலர் சுமதி, மாணவர்கள் அனைவரையும் அழைத்து வந்து அவர்களின் கோரிக்கைகளை தனித்தனி மனுவாக எடுத்து வழங்குமாறு தெரிவித்தார்.
பின்னர் அனைவரிடமும் தனித்தனியாக தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி மாவட்ட கல்வி அலுவலரிடம் வழங்கினர். இதனை தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக அதிகாரிகள் மாணவர்களிடம் உறுதியளித்தனர்.
இதுகுறித்து பள்ளி மாணவ மாணவிகள் கூறுகையில், பாடத்திட்டங்கள் இதுவரை முழுமையாக முடிக்காத நிலையில் பொதுத் தேர்வு நடைபெறுவதால் தங்களால் முழுமையான மதிப்பெண்கள் பெற இயலாது. எனவும் முழுமையாக கல்வி கற்காமல் மேற்படிப்பை தொடர்வதில் சிக்கல் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர். எனவே முதல் திருப்புதல், இரண்டாம் திருப்புதல் தேர்வுகளுக்கான பாடங்களை கொண்டு பொதுத் தேர்வை நடத்த வேண்டும் அல்லது பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாணவ மாணவிகள் முன்வைத்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சேலம் மாவட்ட கல்வி அலுவலர் சுமதி, இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாணவர்கள் வந்துள்ளதாக தகவலறிந்த உடனடியாக அங்கு வந்தேன். மாணவர்களிடம் கோரிக்கைகளை கேட்பதற்காக ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள அரசு மகளிர் துவக்கப் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டு கோரிக்கைகளை அறிந்துள்ளேன். ஜூன் மாதம் தொடங்கவிருந்த பள்ளிகள் கொரோனா நோய் தொற்று காரணமாக அக்டோபர் மாதம் திறக்கப்பட்டது.
இதனால் பாடத்திட்டத்தில் முதல் பாதி மட்டுமே முடிக்கப்பட்டுள்ளதால் பொதுத்தேர்வை எதிர்கொள்ள முடியாமல் உள்ளோம் என்று கூறியுள்ளனர். அவர்கள் அனைவரிடமும் கருத்துக்களை மனுவாக பெற்று தமிழக முதல்வர் மற்றும் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சருக்கும் அனுப்பப்பட உள்ளது. அதன்பின் அரசு எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்வதாக கூறினார்.
அரசு சீருடை அணிந்த 80 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது பெற்றோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்ததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.