தமிழ்நாடு அரசு கேபிள் டிவியானது சேலம் மாவட்டத்தில் 3000 க்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள், நான்கரை லட்சத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் கொண்டு செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக அரசு கேபிள் ஒளிபரப்பு முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் தலைமை கேபிள் நிர்வாகத்திடம் கேட்டால் முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறி 100-க்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள் இன்று இரண்டாம் நாளாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அரசு கேபிள் தாசில்தார் ஃபெலிக்ஸ் ராஜா பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு, கேபிள் ஒளிபரப்பு தடைப்பட்டுள்ளதை விரைவில் சரி செய்யுமாறு கோரிக்கை விடுத்து அவரிடம் மனுக்கள் வழங்கினர்.
இதுகுறித்து ஆபரேட்டர்கள் கூறும்போது, தமிழக அரசு கேபிளை முறையாக பராமரிக்காததால் சேலம் மாவட்டத்தில் இருந்த நான்கரை லட்சம் இணைப்புகள் பாதியாக குறைந்து விட்டன என்றும், கடந்த ஆறு மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் இணைப்புகள் குறைந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினர். அதிலும் கடந்த மூன்று நாட்களாக கேபிள் ஒளிபரப்பு முற்றிலும் தடைபட்டுள்ளதால் மேலும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வேறு ஒளிபரப்புக்கு மாறிக் கொண்டிருப்பதாகவும் அவர்கள்தெரிவித்தனர். மேலும், இந்த சூழ்நிலையில் வாடிக்கையாளர்களை சந்திக்கும் போது அவர்கள் தகாத வார்த்தையால் திட்டுவதாகவும் வேதனை தெரிவித்தனர். அரசின் செயல்பாடுகளால் தனியார் கேபிள் ஆபரேட்டர்கள் பயனடைந்து வருவதாக கூறிய அவர்கள், அரசு கேபிள் கட்டணத்திற்கும் தனியார் கேபிள் கட்டணத்திற்கும் 150 ரூபாய் வித்தியாசம் இருப்பதால் அரசு கேபிளைதான் மக்கள் விரும்புகின்றனர். ஆனால் அரசு சரியான ஒளிபரப்பு வழங்காததால் அவர்கள் மாற்று இணைப்பை நாடி செல்வதாகவும் ஆபரேட்டர்கள் தெரிவித்தனர்.
அனுமதி இன்றி சாலையில் அமர்ந்து தர்மாவில் ஈடுபட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதற்கிடையே அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறை தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் சரி செய்து விரைவில் பொதுமக்களுக்கு கேபிள் சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்களும், கேபிள் ஆபரேட்டர்களும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேபோன்று, சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் அரசாணை 152ஐ திரும்ப பெற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி சேர்ந்த தூய்மை பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாதம் 3000 ரூபாய் என்ற அடிப்படையில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் தங்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தங்களது பணியால்தான் சுகாதாரம் காக்கப்படுவதாக கூறிய தூய்மை பணியாளர்கள் அதிகாரிகள் மட்டும் பணி நிரந்தரம், பதவி உயர்வு, சம்பள உயர்வு வழங்கப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். அரசாணை 152 ரத்து செய்து சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.