ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஐந்து நாட்கள் ஆகியும் கரையாமல் தண்ணீரில் மிதக்கிறது. ஆபத்தை உணராமல் விநாயகர் சிலை மீது ஏறி குதிப்பதும், இழுத்து சிறுவர்கள் விளையாடி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கடந்த திங்கட்கிழமை அன்று ஆயிரத்து மேற்பட்ட சிலைகளை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்நிலையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு, கடந்த புதன்கிழமை காவிரி ஆறு ஒகேனக்கல், தென்பெண்ணை ஆறு இருமத்தூர், மற்றும் அணைகளித் கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால், பெரும்பாலான சிலைகள் இருமத்தூர் தென்பெண்ணையாற்றுக்கு பொதுமக்கள் கரைக்க எடுத்துச் சென்றனர். இதனால் காவிரி ஆற்றில் கரைக்க வரும் சிலைகளை பாதுகாப்பாக கரைப்பதற்கு காவல் துறை சார்பில், ஒகேனக்கல்லில் கிரேன் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் சிலைகளை கரைக்க காவல் துறையினர் காவிரி ஆற்றங்கரையில் கிரேனை நிறுத்தி பொதுமக்கள் எடுத்து வரும் சிலைகளை பூஜை செய்து வழிபட்ட பின் கிரேன் மூலமாக காவல் துறையினரே ஆட்களை வைத்து காவிரி ஆற்றில் இறக்கி கரைத்தனர். சிலை எடுத்து வந்த பொதுமக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்து விட்டு, காவிரி ஆற்றில் கொடுத்து விட்டு சென்றனர்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை காவிரி ஆற்றில் கரைக்கப்பட்ட பெரிய, பெரிய சிலைகள் இன்னும் கரையாமலே ஆற்றில் மிதந்து வருகிறது. மேலும் பிஓபி மற்றும் ரசாயன திரவங்கள் பூச்சிகள் ரெண்டு உருவாக்கப்பட்ட ராட்சத சிலைகள் காவிரி ஆற்றின் கரையாமல் இருந்து வருகிறது. இந்த கரையாத சிலைகளை ஆற்றில் குளிக்க செல்லும் சிறுவர்கள் ஆபத்தை உணராமல் விநாயகர் சிலைகளின் மீது ஏறி குதிப்பதும், சிலைகளை இழுத்துச் சென்று விளையாடுவதுமாக இருந்து வருகின்றனர். மேலும் ரசாயனம் கலந்த, கலர் சாயம் பூசப்பட்ட, பிளாஸ்டிக் பொருட்களுடன் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் வகையில் இருக்கின்ற சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்ட சிலைகள் ஐந்து நாட்கள் ஆகியும் கரையாமல், அப்படியே இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் காவல்துறையினர் மீண்டும் இந்த கரையாக சிலைகளை கரைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அது போல் குளிக்க வரும் சிறுவர்கள் சிலைகளைப் பிடித்து விளையாடுவதை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இனிவரும் காலங்களில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகின்ற விநாயகர் சிலைகளை நீர் நிலைகளை கரைக்க அனுமதி வழங்கக் கூடாது என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.