தருமபுரி கடை வீதியில் உள்ள பூஜை பொருட்கள் விற்பனை நிலையத்தில் இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், சுமார் 6 லட்சம் மதிப்புள்ள பூஜை பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

தருமபுரி நகரில் கடைவீதி தேர்முட்டி அருகே பார்த்திபன் என்பவர் தனது சொந்தமான கட்டிடத்தில் பூஜை சாமான்கள் வைத்து விற்பனை செய்து வருகிறார். இந்த கடையின் மேல் பகுதியில் அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்‌. இந்நிலையில் நேற்று இரவு அவர் கடையை பூட்டிவிட்டு மேலுள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது இரவு சுமார் 10 மணி அளவில் திடீரென கடையின் விளம்பர பலகை பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதனை கண்ட பொதுமக்கள், பார்த்திபனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்‌. இதனால் அதிர்ச்சியடைந்த பார்த்திபன் வந்து பார்த்தபோது, கடையின் உள்ளே இருந்த எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பூஜை பொருட்கள், பாக்கு தட்டு, விளக்கு எண்ணெய், கற்பூரம் உள்ளிட்ட பொருட்கள் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. 



 

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தருமபுரி தீயணைப்பு துறையினர், கடையில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து அக்கம்பக்கத்தில் மேலும் பரவாமல், தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் கடையில் உள்ளே இருந்த சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பூஜை பொருட்கள் எரிந்து சேதமானது. மேலும்  இந்த தகவல் அறிந்து வந்த மின்சாரத் துறை ஊழியர்கள் கடைவீதி பகுதியில் முழுவதுமாக மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் தீயை அணைத்த பிறகு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. பூஜைப் பொருட்கள் விற்பனை கடையில் ஏற்பட்ட தீ விபத்து, மின்கசிவால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எப்பொழுதும் பரப்பாக மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் கடைவீதி பகுதியில், இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. தொடர்ந்து இந்த தீ விபத்து குறித்து தருமபுரி நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.