ஒகேனக்கல் வனப்பகுதியில் மக்னா யானையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக நான்கு பேரை கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் நான்கு நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம், ஒகேனக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி உள்ளிட்ட வன பகுதிகளில் ஏராளமான யானைகள் வாழ்ந்து வருகின்றன. மேலும் கர்நாடக மாநில வனப் பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி கோடை காலங்களில் ஆயிரக்கணக்கான யானைகள் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வனப் பகுதிகளில் தஞ்சமடைகிறது. இந்த வனப் பகுதிகளில் உள்ள யானைகள் காடுகளில் உணவை உண்டு காவிரி ஆற்றில் தண்ணீர் குடித்து வாழ்ந்து வருகின்றது. மேலும் கோடை காலங்களில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் போது, சாலை கடந்து செல்வது, ஊருக்குள் நுழைவது, விவசாய நிலங்களில் நுழைவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்னா யானை ஒன்று மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் இறந்து, துர்நாற்றம் வீசி வந்துள்ளது. இதனை அறிந்த பொதுமக்கள் ஒகேனக்கல் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒகேனக்கல் வனத் துறையினர் மக்னா யானையின் உடலை மீட்டு, அதே இடத்தில் மருத்துவ குழுவினரை வரவழைத்து பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து இந்த பிரேத பரிசோதனையில் மக்னா யானையின் உடலில் காயங்களும், துப்பாக்கி குண்டும் இருந்துள்ளது. இந்த உடற்கூறு அறிக்கையை வைத்து, யானையை சுட்டுக் கொன்றவர்கள் குறித்து விசாரணை நடத்த வனத் துறையினர் சார்பில் குழு அமைக்கப்பட்டது.
இதனை அடுத்து நடைபெற்ற விசாரணையில் ஒகேனக்கல், பென்னாகரம் வனப் பகுதிகளில் நாட்டு துப்பாக்கிகளை வைத்து, வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் குறித்து வனத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்பொழுது பென்னாகரம் அடுத்த மூங்கில்மடுவு பகுதியைச் சேர்ந்த சண்முகம், கமலேசன், குணசேகரன், சிவக்குமார் ஆகிய நான்கு பேர் நாட்டு துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு, இரவு நேரங்களில் வன விலங்குகளை வேட்டையாடுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து நான்கு பேரையும் ஒகேனக்கல் வனத் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மக்னா யானையை சுட்டுக் கொன்றது தெரியவந்தது. இதனை அடுத்து கமலேசன், குணசேகரன், சண்முகம், சிவகுமார் ஆகிய நான்கு பேரையும் ஒகேனக்கல் வனத் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து நான்கு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் குண்டு உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் வன விலங்குகள் வேட்டையாடப்பட்ட தடுக்க, இரவு நேரங்களில் வனத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்