கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 1,08,000 கன அடியாக தொடரும் நீர்வரத்தால் இரண்டாவது நாளாக ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

கர்நாடக, கேரளா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பியுள்ளது. இதனால் கபினி அணையிலிருந்து வினாடிக்கு 34,000 கன அடியும், கிருஸ்ணாராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 72,000 கன அடி என, இந்த இரண்டு அணைகளில் இருந்தும், தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் ஒரு லட்சத்து 6 ஆயிரம் கன அடி தண்ணீர், உபரிநீராக திறக்கப்பட்டுள்ளது.  இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 30,000, 43,000, 60000 கன அடி என படிப்படியாக அதிகரித்து வந்தது. தொடர்ந்து நேற்று காலை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு ஒரு இலட்சம் கன அடி வந்தடைந்தது.

 



 

தொடர்ந்து மாலை மேலும் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 1,08,000 கன அடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நடைப்பாதை, மெயினருவி, சினியருவி, ஐந்தருவிகள் உள்ளிட்ட பாறைகள் முழுவதும் மூழ்கி, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பறந்து விரிந்து இரு கரைகளைத் தொட்டு தண்ணீர் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக வினாடிக்கு சுமார் 1,08,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல் அருவிகளை மூழ்கடித்த படி காவிரி ஆறு கடல் போல் காட்சி அளிக்கிறது.

 



 

 

ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதியில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. மேலும்  பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்கவும், ஆற்றை கடக்கவும், கரையோர பகுதிகளில் நின்று புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், காவிரி கரையோரப் பகுதிகளில், வருவாய், ஊரக வளர்ச்சி, தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 51,742 கன அடியாகவும், கபினி அணையிலிருந்து வினாடிக்கு 38000 கன அடி என, இரண்டு அணைகளிலிருந்தும் திறக்கப்படும் நீரின அளவு வினாடிக்கு 89,741 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மாலை நீர்வரத்து படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கேரள மற்றும் கர்நாடக பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளதால், நீர்த்துப் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.