தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயிகளுடன் நேரடியான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் மற்றும் இடுபொருட்கள் குறித்தும் அரசின் திட்டங்களை எடுத்துரைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய தமிழக விவசாயி ஒருவர், தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள அழியாளம் அணைக்கட்டிலிருந்து, தும்பலஅள்ளி கால்வாய் மூலம் தண்ணீா் கொண்டு வரும் திட்டம் ஒப்பந்தம் விடப்பட்ட நிலையில் இன்னும் பணி தொடங்கப்படாமல் உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் விவசாய பகுதிகள் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை துவக்கப்படாமல் உள்ளது.
எனவே கூட்டுறவு சர்க்கரை ஆலையை அரவை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலமாக ஒகேனக்கல்லில் இருந்து உபரி நீரை, பென்னாகரம் மடம் ஏரி பகுதிக்கு கொண்டு வந்து நிரப்பும் திட்டத்தை செயல் படுத்தி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஏனென்றால் தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் பிழைப்புக்காக வெளி மாநிலத்திற்கு செல்லும் அவல நிலை நீங்கி இங்கேயே வேலை செய்யும் நிலை ஏற்படும். எனவே இத்திட்டத்தை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீர்ப்பாசன திட்டத்தை நிறைவேற்ற, நில அளவீடு செய்வதில் பல்வேறு குளறுபடிகள், தவறுகள் நடைபெறுகிறது. நில மேம்பாடு திட்டத்தின்படி உண்மையான நில அளவீடு செய்து உரிய ஆவணங்களை உருவாக்கி குளறுபடிகளை தவிர்க்க வேண்டும். மேலும் விவசாயிகள் பயிர் காப்பீடு செலுத்திய தொகைக்கான இழப்பீடு, 2019 ஆம் ஆண்டிலிருந்து இன்னும் விவசாயிகளுக்கு கிடைக்காமல் உள்ளது. எனவே விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள காப்பீடு தொகையை பெற்று தர வேண்டும் தெரிவித்தார்.
பென்னாகரம் பகுதியை சோ்ந்த விவசாயி ஒருவா், மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கோமாரி நோய் தாக்குதலால் மாடுகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி வழங்க வேண்டுமென தெரிவித்தார். இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி கோமாரி நோய் தடுப்பூசி அனைத்து கால்நடைகளுக்கும், சிறப்பு முகாம்களை ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.