கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக கனிம வளம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பர்கூர் அருகே உள்ள டாமின் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் கிரானைட் கற்கள் மெருகூட்டும் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில அளவிலான கனிமம் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார்.


இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியது:- கடந்த 4 மாதங்களில் கனிமவளத்துறை சார்பில் 428.62 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இனி வரும் மாதங்களில் கனிம வருவாயை அதிகரிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பக்கத்து மாநிலங்களுக்கு அனுமதியின்றி கனிமங்களை எடுத்து செல்லும் வாகனங்களை முற்றிலும் தடுக்க வேண்டும். கனிம திருட்டை முற்றிலும் தடுத்து, மாநில அரசுக்கு அதிகளவில் வருவாய் ஈட்டி தர வேண்டும்.



இதே போல் உரிய அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகளை கண்டறிந்து உடனுக்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் பல்வேறு நீதிமன்ற வழக்குகளில் வழங்கப்பட்ட, நீதிமன்ற ஆணைகள்படி நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பது தொடர்பாக, பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்வதுடன் இப்பகுதிகளை களஆய்வு மேற்கொண்டு, தேவைப்படின், ஆளில்லா விமான தொழில்நுட்பத்தின் மூலம் அளவீடு செய்து தொடர்புடைய நபர்கள் மீது விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். புவியியல் மற்றும் சுரங்க துறையை மேம்படுத்தும் நோக்கில் அரசுக்கு கூடுதல் வருவாயை ஈட்டித்தர அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என  அமைச்சர் துரைமுருகன் கூறினார்.


கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கனிமம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு எம். சாண்ட், ஜல்லி போன்ற கனிம வளங்கள் கடத்தப்படுவதாக கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க இன்று வரை தனிச்சட்டம் கிடையாது. நமக்கு தேவை என்றால் எடுத்துக்கொள்ளலாம் தேவை அதிகம் என்றால் தடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். மேலும் மத்திய அரசு காவிரி, கோதாவரி, இணைப்பு திட்டம் அறிவிப்பை தொடர்பான கேள்விக்கு நாங்கள் வரவேற்கிறோம். இது நல்ல திட்டம் ஆனால் காலதாமதமாகும் மத்திய அரசு நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்றும் தெரிவித்தார்.  


நகை கடன் தள்ளுபடியில் திமுக முன்னுக்கு முரணாக பேசி குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு எதிர்க்கட்சி என்றால் அப்படித்தான் பேசுவார்கள் என்று பதிலளித்தார். 


எனக்கு ஒன்னும் பயமில்ல - கர்ஜித்த எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami Speech | MK Stalin | DMK



அதனைத்தொடர்ந்து பர்கூரில் தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கு சொந்தமான கிரானைட் ஓடுகள் மெருகேற்றும் தொழிற்சாலை செயல்பாடுகளை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார்.  கிரானைட் குவாரிகளில் உற்பத்தியை அதிகரித்து கூடுதல் வருவாய் ஈட்டி அரசுக்கு வருவாயை அதிகரிக்கவும், லாபகரமாக சந்தைப்படுத்தவும் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். கிருஷ்ணகிரி கோட்டத்திற்கு உட்பட்ட அஜ்ஜனஹள்ளி கருப்புக்கல் கிரானைட் குவாரி, செந்தாரப்பள்ளி மற்றும் தட்ரஹள்ளி பல வண்ண கிரானைட் குவாரிகளை லாபகரமாக செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் செயல்படாமல் இருக்கும் மற்றொரு தொழிற்சாலையை சுற்றுச்சூழல் அனுமதி பெற்று விரைவில் செயல்படுத்தப்படும். டி.பி.எம். மேக்னசைட்டை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்த 40 லட்சம் செலவில் கருவிகளும், டியுனைட் கனிமத்தை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்த 25 லட்சம் செலவில் கருவிகளும் நிறுவப்பட உள்ளன. லாபம் ஈட்ட திட்டம் இவை வருகிற 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்படும். இந்த நிதியாண்டில் 15.63 கோடி அரசுக்கு லாபம் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து அனைத்து மாவட்ட சுரங்க மற்றும் கனிம வளம் அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பர்கூர் மதியழகன் ஆகியோர் பங்கேற்றனர்.