ADMK Admin Change: மீண்டும் சொந்த ஊரில் அதிரடி காட்டிய இபிஎஸ்... சேலம் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் பதவி பறிப்பு
சேலம் மாநகர் மாவட்ட அதிமுகவில் 7 வட்டச்செயலாளர்களின் பதவியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகிறது. குறிப்பாக, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் மாவட்ட வாரியாக பல்வேறு பொறுப்புகளை புதிய உறுப்பினர்களுக்கு வழங்கி வருகின்றன. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் சேலம் மாவட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, சேலம் மாநகர மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த வெங்கடாஜலம் நீக்கப் பட்டார். அவருக்கு பதிலாக மாநகர பொறுப்பாளர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், பாலு ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதேபோல் தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் எம்எல்ஏ சிங்காரம் நியமிக்கப் பட்டுள்ளார். சேலம் மாநகர் மாவட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்பட்டு 130 பேருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. முக்கிய மூத்த நிர்வாகிகளுக்கு மாநில பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாநகர் மாவட்ட அதிமுகவில் 7 வட்டச்செயலாளர்களின் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார்.
இந்நிலையில், புதியதாக பொறுப்பு வழங்கப்பட்டவர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் முருகன், வட்ட செயலாளர்கள் ரஞ்சித்குமார், ஜிம்.ராமு, சுந்தரவேல், அம்மாபேட்டை சவுந்தர்ராஜன், அன்பழகன், கொண்டலாம்பட்டி ரமேஷ், ஆறுமுகம் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக அஸ்தம்பட்டி 14 பி வட்ட செயலாளராக சரவணன், அஸ்தம்பட்டி 15ஏ கார்த்தி, அஸ்தம்பட்டி 30 ஏ ஆதிமாதவன், அம்மாபேட்டை 35ஏ சரவணன், 41ஏ நாகராஜ், கொண்டலாம்பட்டி 55ஏ நந்தகுமார், 57சி வட்ட செயலாளராக சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், பதவி பறிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஜெ பேரவை மாவட்ட இணை செயலாளர்களாக முருகன், ஜிம். ராமு, அஸ்தம்பட்டி பகுதி 3 செயலாளராக ரஞ்சித் குமார், அஸ்தம்பட்டி பகுதி எம்ஜிஆர் இளைஞரணி செயலாளராக சுந்தரவேல், அம்மாபேட்டை 2 ஜெ. பேரவை பகுதி இணை செயலாளராக சவுந்தர் ராஜன், பகுதி 3 எம்ஜிஆர் மன்ற பகுதி இணை செயலாளராக அன்பழகன், கொண்டலாம்பட்டி பகுதி 2 எம் ஜிஆர் மன்ற பகுதி இணை செயலாளராக ரமேஷ், கொண்டலாம்பட்டி பகுதி 3 எம்ஜிஆர் மன்ற பகுதி செயலாளராக ஆறுமுகம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மாவட்ட செயலாளரான எஸ்எஸ் கிருஷ்ணமூர்த்திக்கு அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராகவும், இலக்கிய அணி துணை செயலாளராக புவனேஸ்வரன் என்ற துரைக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.