சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரத்தில் அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றினார். 


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சட்டமன்றத் தொகுதி வாரியாக அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியில் பெரும்பாலான துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பெரிய அளவிலான ஊழலில் ஈடுபட்டுள்ளனர். 2026-ல் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஊழல் பட்டியல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.



வெள்ளை அறிக்கை எனக்காக கேட்கவில்லை. அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் தப்பித்தனர். ஆனால் திமுக ஆட்சியில் புயல் வராமல் வெறும் மழைக்கே மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 20 செ.மீ மழை பெய்தாலும் ஒரு சொட்டு மழை நீர் கூட தேங்காது, 98 சதவீத பணிகள் முடிந்தது என்று முதலமைச்சர் சொன்ன நிலையில், மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். வெள்ளத் தடுப்புப் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருந்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். வர்தா புயலில் 2 லட்சம் டன் குப்பைகள் அதிமுக ஆட்சியில் அகற்றப்பட்டன. உடைந்த மின்கம்பங்கள் அகற்றப்பட்டன. தொடர்ச்சியாக தூர்வாராமல் இருப்பதால் சென்னையில் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


திமுக கூட்டணி வலிமையாக இருக்கிறது என்று சொன்னார்கள். ஆனால் அங்கு புகைய ஆரம்பித்து விட்டது. கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் தொடங்கி விட்டார்கள். திருச்சி காங்கிரஸ் நிர்வாகி வேலுச்சாமி, காமராஜர் குறித்து திமுக நிர்வாகி பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். வைத்த கோரிக்கை வைத்த கோரிக்கை நிறைவேற்றாததால் கூட்டணி கட்சியினர் எச்சரிக்கை மணி அடிக்கத் தொடங்கி விட்டனர்.


கூட்டணி குறித்து தேர்தலின் போதுதான் சொல்ல முடியும். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் இருக்கிறது. அதற்கு முன்பாக எத்வும் சொல்ல முடியாது.அந்தந்த அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமையும். நாடாளுமன்றத் தேர்தலோடு இதை ஒப்பிட முடியாது. அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும்.


போக்குவரத்துத்துறையின் மானியக் கோரிக்கையின் போது புதிய பேருந்துகளை வாங்குவதாக தொடர்ச்சியாக சொல்லி வருகிறார்கள். 1600 பேருந்துகள் மட்டுமே புதிதாக வாங்கப்பட்டுள்ளது. போதுமான அளவிற்கு புதிய பேருந்துகள் வாங்காததால் தீபாவளிக்காக தனியார் பேருந்துகளை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. அதிமுக ஆட்சியில் 15 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன. பேருந்துகளின் பயன்பாட்டுக் காலத்தையும் திமுக அரசு நீட்டித்தும் பேருந்துகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மழையின் போது, குடை பிடித்து போக வேண்டிய நிலை உள்ளது.



ஒவ்வொரு நபருக்கும் ஒரு ஆசை உள்ளது முன்னணி நடிகராக உள்ள விஜய்க்கு ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. பொது சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் கட்சியை தொடங்கியுள்ளார். அவர்களது மாநாட்டிற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் மாநாட்டிற்கு அனுமதி கொடுப்பதில் திமுக அரசு கெடுபிடி செய்கிறது. எங்கள் கட்சியின் சார்பில் நடைபெறும் போராட்டங்களுக்கும் திமுக அரசு அனுமதி கொடுக்கவில்லை. பொதுக்கூட்டமோ, மாநாடோ எது நடந்தாலும் அனுமதி மறுப்பதுதான் திமுக ஆட்சியின் நிலை" என்று பேசினார்.


2026-ல் கூட்டணி ஆட்சி வருமா என கேட்டதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு இலக்கு உள்ளது. அதை நோக்கித்தான் கட்சியினர் பயணிக்கின்றனர். கூட்டணி ஆட்சி குறித்து யூகத்தின் அடிப்படையில் பதிலளிக்க முடியாது. திமுக கூட்டணியில் புயல் கிளம்பியிருக்கிறது. இனிமேல் அதன் பாதிப்பை பார்க்க முடியும். ஆளுநர் மாற்றம் என்பது மத்திய அரசு தொடர்புடையது. அதில் நான் கருத்து சொல்ல முடியும் என்றார்.