சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரத்தில் அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, "அதிமுக தொண்டர்கள் தேனீக்களைப் போல சுறுசுறுப்பாக பணியாற்றியதால் நாடாளுமன்றத் தேர்தலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் அதிகம் பெற்றது. இதில் கொங்கணாபுரம் ஒன்றியம் முதன்மையாக உள்ளது. கட்டிடம் உறுதியாக இருக்க அஸ்திவாரம் இருப்பது கட்சி வலுவாக இருக்க கிளைக்கழகம் வலுவாக இருக்க வேண்டும். அதுபோன்று எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வலுவாக இருக்கிறது. வலுவாக இருப்பதால் எதிரிகள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களை புறமுதுகிட்டு ஓட வைத்து விட்டீர்கள். நாடாளுமன்றத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கலாம். ஆனால் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய சரித்திர வெற்றியைப் பெற வேண்டும்.


2019-ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது கூட நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடியில் 8 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்றோம். ஆனால் 2021-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 91 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கிடைத்தது. அதிமுக ஆட்சியின் திட்டங்களை வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து சொன்னதால்தான் இந்த வெற்றி கிடைத்தது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒருமாதிரியாகவும், சட்டமன்றத் தேர்தலுக்கு ஒருமாதிரியாகவும் மக்கள் பிரித்து பார்த்து வாக்களிக்கிறார்கள்.


துணை முதலமைச்சர் நாடாளுமன்றத் தேர்தல் செமி பைனல் என்றிருக்கிறார். சட்டமன்றத் தேர்தல் பைனல் மேட்சில் அதிமுகதான் வெற்றி பெறும் விளையாட்டை ஆரம்பித்து விட்டீர்கள், அந்த விளையாட்டில் கோப்பையை அதிமுக கைப்பற்றும். ஊடகம் மட்டுமே திமுக ஆட்சியை தூக்கிப்பிடிக்கிறது. உண்மைச் செய்தியை வெளியிட்டால் திமுக டெபாசிட் வெற்றி பெற முடியாது. கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வெற்று விளம்பர அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. உண்மை ஒருநாள் மக்களுக்குத் தெரியும் போது திமுக காணாமல் போகும்.


அதிமுக 1972-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கட்சியின் 53-ம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். ஆத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கனமழையின் போது ஒருவர் கூட கிளம்பிச் செல்லவில்லை. அந்த அளவிற்கு கட்டுகோப்பான இயக்கம். ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவை வீழ்த்த திமுக முயற்சிக்கிறது. திமுக அதன் கூட்டணியை மட்டுமே நம்பி உள்ளது. அவர்களுக்கு தனிப்பட்ட பலம் இல்லை. கூட்டணி கட்சி கைவிட்டால் திமுக வீழ்ந்து விடும். அதிமுக அப்படி இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து வெற்றி தோல்வியை மாறி மாறி சந்தித்து வருகிறோம். எந்த கட்சிக்கும் தொடர் வெற்றி கிடைக்கவில்லை. எந்த கட்சியும் தொடர்ச்சியாக தோல்வியை சந்திக்கவில்லை. வெற்றி தோல்வி மாறி மாறி வரும்.


தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழ அடித்தளம் போட்டது அதிமுக ஆட்சிதான். 30 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சிபுரிந்து பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தியது. இதேபோன்று திமுகவால் சொல்ல முடியாது. திமுக என்றால் ஊழல் என்ற நினைவு வரும். அதிமுகவில் மட்டும்தான் தொண்டர் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும். கிளைக் கழக செயலாளர் தொடங்கி இன்றைக்கு பொதுச் செயலாளராக உயர்வதற்கு கட்சித் தொண்டர்கள்தான் காரணம். எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் கட்சிக்கு விசுவாசமாக தொண்டர்கள் உழைப்பதால் எடப்பாடி தொகுதி அதிமுகவின் கோட்டையாக உள்ளது.



சில பேர் நம்முடைய கட்சியின் வலிமையை குறைத்து மதிப்பிடுகிறார்கள். பெரிய தோல்விக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த வரலாறு அதிமுக, திமுக இரு கட்சிக்குமே உள்ளது. சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். கீழே இருப்பவர்கள் மேலே வருவார்கள். திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது. திமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்திற்கு எந்த ஒரு திட்டமும் கொண்டு வரப்படவில்லை. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, தொகுதி வாரியாக என்னென்ன திட்டம் கொண்டு வந்தோம் என்பதை சொல்ல முடியும். ஆனால் திமுக ஆட்சியில் அதைப்போல சொல்ல முடியுமா என் வெற்றிக்காக பாடுபட்டவர்களை கண்ணை இமை காப்பது போல நான் காப்பேன் என்பது உறுதி. 


அதிமுக ஆட்சியில், ஒன்றுமே செய்யவில்லை என்று திமுகவினர் ஒரு பொய்யான செய்தியை சொல்லி வருகிறார்கள். பின்தங்கிய எடப்பாடி பகுதியில் அரசு கலை கல்லூரி தொடங்கப்பட்டது. இதனால் குறைந்த கட்டணத்தில் ஏழைக் குடும்பங்களைச் சேரந்த குழந்தைகள் உயர்கல்வி பயில வாய்ப்பு ஏற்பட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பி.எட் கல்லூரி 3 ஆண்டுகளாக திறக்காமல் உள்ளனர். நான் ரிப்பன் கத்திரிக்கோல் வாங்கி தருகிறேன். அதன் பிறகாவது திமுக ஆட்சியாளர்கள் கட்டிடத்தை திறக்க முன்வர வேண்டும். கால்நடை பூங்கா இந்தியாவில் மிகப்பெரிய அளவில் தலைவாசலில் ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்டது. கால்நடை மருத்துவக் கல்லூரி அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட நிலையில், ஆராய்ச்சி நிலையத்தை இன்னும் திறக்காமல் உள்ளனர். பூட்டி வைத்துள்ளனர். விவசாயிகளுக்கு நன்மை அளிக்க கூடிய திட்டம் செயல்படாமல் உள்ளது. அதிமுக ஆட்சித் திட்டங்களை முடக்கி வைக்கும் திமுக எப்படி விவசாயிகளுக்கான திட்டங்களை செயல்படுத்தும். கிராமப்புற ஏழைகளுக்கு உதவும் திட்டங்களை முடக்குவது எந்த வகையில் நியாயம். விவசாயிகள் போராட்டம் நடத்திய பிறகும் கால்நடை ஆராய்ச்சி நிலையத்தை திறக்க திமுக அரசு முன்வரவில்லை. 


துணை முதலமைச்சர் உதயநிதி ஊர் ஊராக செங்கல்லை தூக்கி கொண்டு சுத்தினார் ஆனால் பல லட்சம் செங்கல்லால் கட்டப்பட்ட கால்நடை ஆராய்ச்சி பூங்காவை திறக்க திமுகவிற்கு மனமில்லை. மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு போராடுபவர்கள், மாநில அரசின் சார்பில் கட்டப்பட்ட கால்நடை ஆராய்ச்சி நிலையத்தை ஏன் திறக்கவில்லை. கிராமம் முதல் நகரம் வரை அதிமுக ஆட்சியின் சாதனைகளைத் தான் மக்கள் பேசி வருகிறார்கள். 41 மாத கால திமுக ஆட்சியில் உதயநிதியை துணை முதல்வராக்கியதுதான் முதலமைச்சர் ஸ்டாலினின் ஒரே சாதனை.


எல்லா நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பெண்கள் பயணிக்கலாம் என்று சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குறுதி அளித்து விட்டு, இப்போது பிங்க் நிற பேருந்துகளில் மட்டுமே பயணத்திற்கு இலவசம் என திமுக அரசு அந்தர் பல்டி அடித்து விட்டது. மேட்டூர் அணை உபரிநீரைக் கொண்டு 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் ரூ.565 கோடி மதிப்பில் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தை 41 மாத காலமாக நிறைவேற்றாமல் முடக்கி வைத்துள்ளனர். ஓமலூர், மேட்டூர், சங்ககிரி மற்றும் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிகளில் வறண்ட ஏரிகளை நிரப்பும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ள திமுக அரசால் மக்களுக்கு எப்படி நன்மை கிடைக்கும்.


அரசாங்கம் மாறலாம். மக்கள் மாற மாட்டார்கள். ஒரு அரசு கொண்டு வந்த திட்டங்களை அடுத்து வரும் அரசு திட்டங்களை விடாமல் நிறைவேற்றினால்தான் மக்கள் பயன் பெறுவார்கள். விரைவில் அதிமுக கிளைக் கழகத் தேர்தல் நடைபெற உள்ளது. கிளைக்கழகத்தில் பணிபுரிபவர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டும். நான் கிளைக் கழக செயலாளராக இருந்த சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் தொடர்ந்து அதிமுகவிற்கு அதிக வாக்குகளை பெற்று தந்து வருகிறேன். அதைப்போல புதிதாக வரும் கிளைக்கழக செயலாளர்கள் கடினமான உழைப்பு கொடுத்தால்தான் அதிக வாக்குகள் கிடைக்கும். வாக்குகள் குறைந்துள்ள வாக்குச்சாவடியைச் சேர்ந்த வாக்காளர்களை சந்தித்து அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்குகளை சேகரிக்க வேண்டும். 2021-ல் வெறும் மூன்று வாக்குச்சாவடிகளில் குறைவாக வாக்கு பெற்ற நிலையில் தற்போது 21 வாக்குச்சாவடிகளில் அதிமுகவிற்கான வாக்குகள் குறைந்துள்ளது. அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு மக்களை சந்தித்து அதிமுக சாதனைகளை எடுத்துச் சொல்ல வாக்குகளை சேகரிக்க வேண்டும்.



திமுக ஆட்சியில் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. ஆனால் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட திட்டங்களையும் திமுக அரசு முடக்கிவிட்டது. கொங்கணாபுரம் பகுதியில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில் முடங்கிப் போய்விட்டது. அந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட அலங்கோல ஆட்சிக்கு முற்றுப்புள்ள வைக்க வேண்டும்.


வாரிசு அரசியல் நடைபெறுகிறது. கருணாநிதி குடும்பத்தில் பிறந்திருந்தால் மட்டுமே திமுகவில் பொறுப்பு கிடைக்கும். மக்கள் ஏமாளிகள் அல்ல. கருணாநிதி குடும்பம் மீண்டும் மன்னர் ஆட்சியை கொண்டு வரப்பார்க்கிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக வரும் சட்டமன்றத் தேர்தல் அமைய வேண்டும். உதயநிதியின் வயதுக்கு மேல் எனக்கு அனுபவம் இருக்கிறது. 50 ஆண்டுகாலம் கட்சியில் உழைத்த்தால்தான் எனக்கு பொதுச் செயலாளர் பதவி கிடைத்த்து. கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்பதை தவிர வேறெந்த அடையாளம் உதயநிதிக்கு இருக்கிறது. 1989-ல்தான் நானும் ஸ்டாலினும் முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனோம். கட்சியில் படிப்படியாகத்தான் நான் வளர்ந்தேன். என்னைப் போல உதயநிதி வரவில்லை. எம்எல்ஏ ஆகி ஒன்றரை வருடத்தில் அமைச்சர், அமைச்சராக ஒரு வருடத்தில் துணை முதலமைச்சர் என உதயநிதிக்கு அவசரம் அவசரமாக வழங்குவது ஏன். முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை என்று மக்கள் பரவலாக பேசி வருகிறார்கள். அவருக்கு பிறகு அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பதவிக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் உதயநிதிக்கு பதவி தருகிறார்கள். நாட்டை நிர்வகிக்கத் தேவையான அனுபவம் உதயநிதிக்கு இல்லை. கருணாநிதியின் பேரன் என்பதால் உதயநிதிக்கு பதவி கிடைத்திருக்கிறது. ஸ்டாலினுடன் மிசாவில் கைது செய்யப்பட்ட மற்ற யாருக்கும் பதவி கிடைக்கவில்லை. ஸ்டாலின் கூட எம்.எம்.ஏ, அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், துணை முதலமைச்சர் என படிப்படியாக வந்தார். ஆனால் உதயநிதி ஜெட் வேகத்தில் திமுக காரர்களை தூக்கி போட்டு விட்டு பதவிக்கு வந்து விட்டார். இப்படி பதவிக்கு வந்து விட்டு நான் எப்படி பதவிக்கு வந்தேன் என உதயநிதி கேட்கிறார். அவருடைய வயதைத் தாண்டிய அரசியல் அனுபவம் எனக்கு உள்ளது.


அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதை திமுக ஆட்சியாளர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. காவல்துறையின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட்டது இல்லை. இன்னும் 15 அமாவாசைதான் இருக்கிறது. 2026-ல் பொதுமக்கள் ஆசியுடன் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும். முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அடிக்கடி சேலம் வருகிறார்கள். எத்தனை முறை வந்தாலும் மக்கள் ஆதரவு கிடைக்காது. இப்போது புதியதாக சுற்றுலா துறை அமைச்சர் வந்துள்ளார். அவர் எங்கேயும் போகாமல் சேலத்தை சுற்றி சுற்றி வருகிறார். எத்தனை முறை சுற்றி வந்தாலும் பாட்சா பலிக்காது.


வாழையடி வாழையாக அதிமுக வெற்றி பெற அதிக இளைஞர்களை கட்சியில் சேர்க்க வேண்டும். மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் 13 லட்சம் பேர் கலந்து கொண்டனர். அதிமுக ஆட்சியில் 36 ஆயிரம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்து அதை எதிர்கொண்டோம். ஆனால் திமுக ஆட்சியில் போராட்டங்களுக்கு அனுமதி கொடுப்பதில்லை. அதிமுக ஆட்சியில் பொதுமக்கள் நிம்மதியாக இருந்தனர். திமுக ஆட்சியில் கொலை பட்டியலை வெளியிடும் அவலம் நிலவுகிறது. பொம்மை முதலமைச்சர், திறமையற்ற முறையில் ஆட்சி நடத்துவதால் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டது. போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறி விட்டது. மாணவர்களும் இளைஞர்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அதை தடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். குடும்ப ஆட்சியில் பல முதலமைச்சர்கள் இருப்பதால், காவல் துறை சுதந்திரம் இன்றி ஏவல் துறையாக மாறி விட்டது. காவல்துறையக் கண்டு யாரும் பயப்படுவதில்லை. குற்றம் செய்பவர்கள் காவல்துறையினர் மீதே தாக்குதல் நடத்துகின்றனர். நாட்டை ஆளும் முதலமைச்சருக்கு திறமை இல்லாததால் தான் இது போல நடக்கிறது" என்று பேசினார்.