சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சின்ன சோரகை மற்றும் வீரக்கல் கிராமங்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவர்கள் நல்ல கல்வி பெற வேண்டும் என்பதற்காக அதிமுக ஆட்சியில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு அதிமுக செயல்பட்டதால் நாட்டிலேயே தமிழகத்தில் உயர்கல்வி படிக்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.


நாட்டிலேயே அதிக தார்சாலைகள் உள்ள இடம் தமிழ்நாடு என்ற நிலையை அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு மக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் முதலமைச்சர் என்ற பதவி கிடைத்தது. எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற ஒருவர் தான் தமிழக முதலமைச்சரின் என்ற பெருமை கிடைத்தது. குடிமராமத்து திட்டத்தின் மூலமாக விவசாயிகள் பயன்பெற்று, வண்டல் மண் இலவசமாக அள்ளி பயன்பட்டனர். ஆனால் தற்பொழுது திமுக ஆட்சி ஒருபிடி மண்ணை கூட அல்ல முடியாது.



மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை நூறு ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம், அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் ஒரே ஆண்டில் நிறைவேற்றி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருப்போம். ஆனால் திமுக ஆட்சியில் வீணாக உபரிநீர் கடலில் கலந்துவரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ஆமை வேகத்தில் திமுக ஆட்சியினர் செயல்படுத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்குவது தான் திமுக ஆட்சியின் சாதனையாக இருந்து வருகிறது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா இருசக்கர வாகனம், தாலிக்கு தங்கம் திட்டம், முதியோர் உதவித்தொகை, மீண்டும் அதிமுக ஆட்சி வந்தவுடன் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். குறிப்பாக முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்கப்படும் என்றும் கூறினார்.


அதிமுக ஆட்சி மீண்டும் வந்தவுடன் அதிகாரிகள் மூலமாக முதியோர்கள் இல்லம் தேடி வந்து மனுக்களை பெற்று அவர்களுக்கு உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஏழை மக்களை காப்பாற்றுவதற்காக தான் எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை உருவாக்கினார். அதனை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கட்டிக்காத்தார். இருவருக்கும் பிள்ளைகள் இல்லை மக்கள் தான் குடும்பமாக பார்த்தார்கள். அதிமுக கட்சி என்பது மக்களுக்கான கட்சி, மக்களுக்காக உழைக்கின்ற கட்சி மக்களுடைய துன்பம், வேதனை அனைத்திலும் ஏற்றம் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக என்பதை ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும்போது நிரூபித்து வருகிறோம் எனவும் பேசினார்.



பின்னர் வீரக்கல் கிராமத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் உள்ள பொருட்கள் திருட்டு போய்க் கொண்டுள்ளது. பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் முறையாக கிடைப்பதில்லை எனவும் குற்றம்சாட்டினர்.


இந்தியாவிலேயே விலை இல்லாமல் நியாயவிலை கடைகளில் பொருட்கள் தமிழகத்தில் தான் வழங்கப்படுகிறது எனவும் கூறினார். தமிழகத்தில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசாங்கம் திமுக அரசாங்கம் தான், பல்வேறு துறைகளில் ஊழல் செய்தால் திமுகவை மக்கள் நிராகரித்தனர். திமுக ஆட்சிக்கு வந்தால் 560 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று கூறிய நிலையில், கவர்ச்சிகரமாக பேசி, மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று குடும்ப ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் அவருக்குப் பிறகு உதயநிதி, இன்பநிதி என குடும்ப ஆட்சி தான் செய்து வருகிறார்கள். மக்களை புறக்கணிப்பது தான் இந்த ஆட்சியில் மக்கள் கண்ட நன்மை என்றும் கூறினர்.


திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள், கொல்லைப்புறமாக ஆட்சியில் அமைந்த பிறகு மக்களை மறந்த முதல்வர்தான் ஸ்டாலின் என்று கூறினார். முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக வலுமையான கட்சியாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்டுகின்ற காலம் வந்துகொண்டு இருக்கிறது. ஊழலுக்கு சமட்டி அடிக்கின்ற தேர்தலாக இந்த தேர்தல் அமையவேண்டும், இதற்கு அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்குகள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.