சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியசோரகை கிராமத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினர். அப்போது அவர் பேசியது, அதிமுக ஆட்சியில் தான் மக்களுக்காக நிறைய திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றினோம், மேச்சேரி நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்து எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய சோரகை பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.


மேட்டூர் உபரிநீர் திட்டத்தின் மூலமாக 100 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம் மூலமாக பெரியசோரகை பகுதியில் உள்ள இரண்டு ஏரிகள் நிரப்பப்பட்டது. இந்த திட்டம் திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. அதிமுகவை பழிவாங்குவதாக நினைத்து காழ்புணர்ச்சியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் முடக்கியுள்ளது. மீண்டும் மக்கள் பெரும் ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமையும் இத்திட்டம் வேகமாக செயல்பட்டு 100 ஏரிகள் நிரப்பப்படும் என்பதை உறுதி அளிப்பதாக கூறினார்.


அதிமுக ஆட்சியில் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்திற்கும் முடிவு விழா நடத்திவிட்டனர். தமிழகத்தில் ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவர்களுக்கு 52 லட்சம் மடிக்கணினிகள் அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டது. இந்த திட்டத்தையும் தமிழக முதல்வர் நிறுத்திவிட்டார். ஏழைகளுக்கு கொடுக்கும் திட்டங்கள் அனைத்தையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நிறுத்திவிட்டார்.



அதிமுக ஆட்சியில் விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்டோம், எப்பொழுதெல்லாம் விலைவாசி உயர்கிறதோ? அப்போது எல்லாம் அரசாங்கம் தனிநிதி ஒதுக்கீடு செய்து அதை கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தை பார்ப்பதற்கு நேரம் சரியாகவுள்ளது, தமிழக மக்களை பார்ப்பதற்கு நேரமில்லை, தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் தொல்லை உள்ளிட்ட செய்திகள்தான் அதிகம் வருகிறது. அதுபோன்ற அலங்கோல ஆட்சி தான் தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதை மக்கள் பேசி வருகின்றனர். தமிழகத்தில் 2011 ஆண்டுக்கு முன்பாக எப்படி இருந்தது, 2011 பிறகு அதிமுக ஆட்சி வந்தவுடன் எப்படி இருந்தது என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் எனவும் கூறினர்.


இதுவரை சேலம் மேட்டூர் அணை கட்டப்பட்ட 83 ஆண்டுகால வரலாற்றில் மேட்டூர் அணை தூர்வாரப்பட்டது அதிமுக ஆட்சியில் மட்டும்தான் என்று பெருமிதமாக தெரிவித்தார். கர்நாடக அரசிலிருந்து தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை சட்டப் போராட்டம் நடத்தி பெற்று கொடுத்தது அதிமுக ஆட்சியில் தான். மக்களுக்காக குரல் கொடுக்கின்ற கட்சி அதிமுக தான் எனவும் பேசினார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை, ஏழை மக்களின் நிலை கருதி, தை பிறந்தால் வழிபிறக்கும், தமிழரின் முக்கிய பண்டிகையில் எல்லாம் வீடுகளிலும் தைப்பொங்கல் பொங்க வேண்டும் என்பதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. தமிழகத்தில் தைப்பொங்கலை மகிழ்ச்சியுடன் அதிமுக ஆட்சியில் தான் கொண்டாடினர். மேலும் மருத்துவ படிப்பை படித்து முடிப்பதற்கு 75 லட்சம் தேவைப்படும், வசதி இல்லாத மாணவர் குடும்பம் 75 லட்சம் செலவு செய்து மருத்துவர்காக முடியாது. அதற்காக 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்று கொடுத்து மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது எனவும் கூறினார்.



மதுபான விற்பனை மூலமாக அதிகத் தொகையை முதல்வர் குடும்பத்திற்கு கொடுத்தது அமைச்சர் செந்தில் பாலாஜி தான் என்று தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு தேவையான திட்டங்களை செய்யவில்லை, கொள்ளையடிப்பதில் மட்டும்தான் குறிக்கோளாக இருந்தனர். செந்தில் பாலாஜியின் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடுத்துள்ளனர். உண்மையான முதலமைச்சராக ஸ்டாலின் இருந்தால் ஊழல் குற்றச்சாட்டப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவை இருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, கைதி எண் கொடுக்கப்பட்ட ஒருவர் அமைச்சராக எப்படி நீடிக்க முடியும், காவல்துறை பாதுகாப்பில் தான் செந்தில் பாலாஜி இருந்து வருகிறார். உடல்நிலை சரியான உடன் சிறையில் அடைத்து விடுவார்கள். ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டவர் எவ்வாறு அமைச்சராக இருக்கமுடியும், எந்த ஆட்சியாக இருந்தாலும், ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டவர் அமைச்சரவிலிருந்து நீக்கப்பட்ட வேண்டும் என்றும் பேசினார்.


மேலும் அமைச்சரவையில் நீக்கப்பட்டால் செந்தில் பாலாஜி உண்மையை சொல்லிவிடுவார். அவ்வாறு சொல்லிவிட்டால் அதிமுக ஆட்சி போய்விடும், இதனால்தான் முதலமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்களும் பதறிபோய் மருத்துவமனையில் குவிந்து நலம் விசாரித்து வருகின்றனர். செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டு கொடுத்தவரே ஸ்டாலின் தான் அப்பொழுது அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தார். போக்குவரத்து துறையில் வேலைவாங்கி தருவதாக கூறி, பலபேரிடம் பணம் பெற்றுகொண்டு ஏமாற்றியதாக புகார் சொன்னவர் இப்போதைய முதல்வர் ஸ்டாலின் தான் என்றும் கூறினார். இப்பொழுது திமுக கட்சிக்கு சென்றவுடன் செந்தில் பாலாஜி தூய்மையாகி விடுவார்களா என்று கேள்வி எழுப்பினர். எனவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் வெற்றியை மக்கள் தேடித் தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். தமிழகத்தின் சேராத இடத்திற்கு போய் இந்த ஆட்சி சேர்ந்துவிட்டது இந்த ஆட்சியை மக்கள் தான் அகற்ற வேண்டும் கோரிக்கை விடுத்தார்.