சேலம் மாநகரை ஒட்டியுள்ள வெள்ளைக்கல் பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மாக்னசைட் தாது கொண்ட நிலப்பரப்பு உள்ளது. அதிக மாக்னசைட் தாது கொண்ட சேலத்தில் மத்திய அரசு நிறுவனமான பர்ன் அன்ட் கோ, தமிழக அரசு நிறுவனமான டான்மேக் மற்றும் தனியார் நிறுவனங்களான டாடா, டால்மியா மற்றும் பல சிறு நிறுவனங்கள் என 10 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் குவாரி அமைத்து மாக்னசைட் தாது வெட்டி எடுத்து வந்தன. பெரும்பகுதியில் தாது வெட்டி எடுத்தபின்னர் மேற்பரப்பில் இருந்த கழிவு மண் அனைத்தும் அப்பகுதியிலேயே கொட்டி வைத்துள்ளனர். இந்த மண் கொட்டப்பட்ட பகுதி மலைபோல் காட்சியளிக்கின்றன. கடந்த ஆட்சியின் போது தனியார்கள் கனிமம் வெட்டி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் திருட்டு தனமாக கனிமங்கள் வெட்டி எடுப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டன. 



கடந்த மாதம் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டு, கடத்தல் லாரிகளையும் கடத்தலுக்காக வைக்கப்பட்டிருந்த வெள்ளை கற்களையும் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மீண்டும் வெள்ளை கற்கள் வெட்டி கடத்துவதற்காக கடத்தல் கும்பல் அங்கு சென்றுள்ளது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சியினர் சிலர் அங்கு சென்று தடுத்து நிறுத்த முற்பட்டனர். அப்போது கடத்தல் கும்பல்கள் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதில் பாமகவை சேர்ந்த பிரசாத், ஸ்ரீனிவாசன், கார்த்திக், பூபதி ஆகியோர் படுகாயமடைந்தனர். படுக்காயம் அடைந்த அனைவரும் சேலம் அரசு மோகன் குமரமங்கலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் 3 இருசக்கர வாகனங்களுக்கு தீவைத்துவிட்டு கடத்தல் கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதனை அடுத்து சூரமங்கலம் காவல்துறையினர் அப்பகுதியில் நேரில் சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



இது தொடர்பாக இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ் மனு அளித்துள்ளார். அதில் சேலம் மாவட்டத்தில் அனுமதி இன்றி வெள்ளை கல் வெட்டி எடுப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ், சேலம் மாமாங்கம் பகுதியில் அதிக அளவு மேக்னசைட் என்று சொல்லக்கூடிய வெள்ளை கற்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது. நானும் இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினரான பின் பல மனுக்கள் அளித்துள்ளேன். ஆனால் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. சேலத்தில் மேக்னிசைட் ஆலைகள் ஏராளமாக இருக்கிறது. இந்த உலகில் பெரும்பாலும் விதிகளை முறையாக பின்பற்றுவதில்லை. வெள்ளை கற்கள் முறையாக வாங்காமல் இரவோடு இரவாக லாரி வைத்து மலைகளை குடைந்து வெள்ளை கற்கள் கடத்தப்படுகின்றது. எது தொடர்பாக சேலம் மாவட்ட காவல் துறையினருக்கும், சேலம் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளேன். மேலும் நேற்றைய தினம் இரவு வெள்ளை கற்கள் எடுப்பதைத் தட்டி கேட்க சென்ற பொதுமக்களை தாக்கி அவர்களுடைய இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்து எரித்திருக்கின்றனர் மர்ம ஆசாமிகள். இந்த கும்பல் கனிம வளத்தை கொள்ளையடிப்பதில் மாப்பியா போன்ற செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.