தமிழ்நாடு சட்டப்பேரவை நேற்று காலை கூடியது. ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆளுநர் ரவி சட்டப்பேரவைக்கு வந்தவுடன் தேசிய கீதம் முதலில் ஒலிக்கப்பட வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் தமிழக சட்டப்பேரவையின் மாண்பின்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படும் என கூறி உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் ரவி தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திமுக ஆர்ப்பாட்டம்:
இந்த நிலையில், சட்டப்பேரவை நேற்று காலை கூடிய நிலையில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டதாகக் கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் வெளியேறினார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழ் நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் அவமதித்ததாக தமிழக ஆளுநரை கண்டித்து இன்று தமிழக முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலத்தில் திமுக ஆர்ப்பாட்டம்:
இதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை பகுதியில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மத்திய மாவட்ட திமுக அவை தலைவர் சுபாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவலிங்கம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சட்டப்பேரவையை அவமதித்த தமிழக ஆளுநரை கண்டித்தும், அதிமுக பாஜக கள்ளக்கு கூட்டணியை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, ஆளுநர் தமிழ் தாய் வாழ்த்து அவமதிக்கும் விதமாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் ரவியாக செயல்பட்டு வருகிறார். ஒன்றிய அரசு ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட அஜந்தா தமிழகத்தை சீர்குலைக்க வேண்டும் என்பது தான். தமிழக மண் தான் பாசிச பாஜகவை ஓட ஓட விரட்டி கொண்டிருக்கிறது. இதனால்தான் நாம் துன்புறுத்தப்படுகிறோம். தமிழகத்தை ஒரு அங்கமாக இந்திய அரசு பார்க்கவில்லை. அனைத்து மாநிலங்களின் கூட்டமைப்பு தான் இந்தியா, ஆனால் இதனை ஒன்றிய அரசு ஏற்க மறுக்கிறது. தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அடிமையாக கருதுகின்றனர். தமிழர்கள் தங்களது ரத்தத்தை வேர்வையாக சிந்தி 6000 கோடி வரி செலுத்துகின்றார்கள். ஆனால் ஒன்றிய அரசு ஒரு ரூபாய்க்கு 29 காசுகள் மட்டுமே திரும்ப கொடுக்கிறது. மாநிலங்களுக்கு சுயாட்சி வேண்டும் என்ற அளவிற்கு அனைத்து மாநிலங்களும் தள்ளப்படுகின்றனர். மத்திய அரசு திட்டங்களால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறோம் என்றார்.