சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "சட்டப்பேரவையில் காரணமே இல்லாமல் ஆளுநர் வெளியேறியது அநாகரிகமான அணுகுமுறை. அவர் சட்டசபைக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிடலாம். இதேபோல் கர்நாடகா போன்ற இதர மாநிலங்களில் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநரால் வெளியே செல்ல முடியுமா? சட்டப்பேரவைகளில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆளுநருக்கு இல்லை என்று கடுமையாக விமர்சித்தார். 


கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் யாராலும் நீண்ட காலமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்ய முடியாது. இது போன்ற சம்பவங்களில் குற்றம் வெளிவரும்போது உண்மை குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள் என்ற கோணத்தில் தான் இந்த வழக்கையும் நீதிமன்றம் அணுகியுள்ளது. இதேபோல், அண்ணா பல்கலைக்கழகம் விவகாரத்தையும் தமிழக அரசு மூடி மறைக்கவே முயற்சிக்கிறது. அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பாக தற்போது குரல் கொடுத்து வரும் எதிர்க்கட்சிகள் கூட பொள்ளாச்சி சம்பவத்தில் கூட தற்போது வரை நடவடிக்கை இல்லை. அனைத்து பிரச்சனைகளையும் அரசு காலம் தாழ்த்தி அப்படியே விட்டுவிடுகிறது என்றார். 



புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததாக எழுந்த குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த அவர், தமிழ்நாட்டில் "திராவிடம் நல் திருநாடு" எங்கு இருக்கிறது? நான் அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாற்றி புரட்சி பாவலன் பாடிய பாட்டை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவிப்பேன். அந்த நிகழ்ச்சியில் தான் அரசியல் பேசியதை விட திமுக அமைச்சர்கள் தான் முழுக்க முழுக்க அரசியல் பேசினர். ஆனால் நான் பேசியதற்கு மட்டும்தான் கண்டனம் எழுந்துள்ளது. நான் பேசி கண்டனம் வரவில்லை என்றால், நான் ஏன் பேச வேண்டும்? நான் பேசியதில் எந்த தவறும் இல்லை. நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? என கேள்வி எழுப்பினார்.


திமுகவும், அதிமுகவும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சொல்ல தகுதி இல்லை. தமிழ்நாட்டில் நியாயம் கேட்டு போராடுவதற்கு கூட யாருக்கும் அனுமதியில்லை. சுதந்திரப் போராட்டத்தின் போது போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்றாலும், போராடும் உரிமையாவது இருந்தது. ஆனால் தற்போது அதுவும் இல்லை. கருப்பு என்றால் ஏன் உங்களுக்கு வெறுப்பு? உங்கள் கட்சி கொடியிலிருந்து கருப்பை எடுத்து விடுவீர்களா? நீட் தேர்வு சோதனைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்றார். 



கூட்டணி தர்மத்திற்காக கூட்டணி தலைமையை அனுசரிக்க வேண்டி திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் அமைதியாக உள்ளனர். மீறி பேசினால் கண்டிப்பாக கூட்டணி களையும். நூறாவது சுதந்திர ஆண்டை தொடப்போகும் இந்தியாவில் தற்போது வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறினார். 


ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிச்சயம் போட்டியிடும் என தெரிவித்தார். 


தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பின் மதிப்பு குவாட்டர் விலை கூட இல்லை என விமர்சித்தார். 


நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருவது குறித்த கேள்விக்கு, இந்த நாற்காலியில் அமர்ந்து பாருங்கள் அப்போதுதான் அது தெரியும். கட்சியில் கட்சிக்காக இருப்பவர்கள் மட்டும்தான் இங்கு இருக்க முடியும். தான் தான் கட்சி என்று இருப்பவர்களால் நிலைத்திருக்க முடியாது. நான் இல்லை என்றாலும் நாம் தமிழர் கட்சி இருக்கும்" என்று கூறினார்.