தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம், ஆகிய பகுதிகளிலும், மலைப் பகுதிகளிலும், கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் உத்தரவையடுத்து, பாப்பாரப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் முனிராஜ் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் பாப்பாரப்பட்டி பகுதியில் உள்ள பிக்கிலி, திருமல்வாடி உள்ளிட்ட மலை பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

 

அப்போது பிக்கிலி அடுத்த புதுகரம்பு பகுதியைச் சேர்ந்த குமார் (40), என்பவரின் தலைமையில் கஞ்சா விற்பனை பல்வேறு நடந்து வருவதாக தனிப்படை காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. கஞ்சா விற்பனையை குமார் தனது உறவினர்களை வைத்து நடத்தி வந்துள்ளார். இதில் குமாரின் உறவினர் சக்திவேல், தண்டகாரணஹள்ளியில் வீட்டில் பதுக்கி வைத்து, கஞ்சா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சக்திவேல் வீட்டில் காவல் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 



 

இதேபோன்று கிட்டம்பட்டி அடுத்த திருமல்வாடி கிராமத்தில் சின்னசாமி (55) என்பவர், வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து  இருவரையும் பாப்பாரப்பட்டி காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து விற்பனைக்காக  சுமார் 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா பதுக்கி விற்பனை செய்த மூன்று பேர் மீது பாப்பாரப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தொடர்ந்து மலை கிராமங்களில் கஞ்சா சப்ளை செய்து வந்த தலைமறைவாக உள்ள  புது கரம்பை சேர்ந்த குமாரை தனிப்படை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இதுவரையில் கஞ்சா செடி வளர்த்தவர்கள், பதுக்கியவர்களிடமிருந்து குறைந்த அளவு கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்து வந்தனர். ஆனால் பாப்பாரப்பட்டி மலை பகுதியில் 18 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாலக்கோடு பகுதியில் இதுப்போன்று கஞ்சா, அரசு மதுபாட்டில்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது போன்ற செயல்கள் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாரண்டஹள்ளி பகுதியில் போலி மதுபான தொழிற்சாலை நடத்திய, மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக காவல் துறையினர் குடும்பத்துடன் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.