தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள தொப்பையாறு அணை 50 அடி உயரம் கொண்டது. இந்த அணைக்கு சேலம் மாவட்டம் சேர்வராயன் மலை மற்றும் முத்தம்பட்டி வனப்பகுதியில் பெய்யும் மழைநீர் ஆனது நீர் ஓடைகளின் பாதையின் வழியாக கடந்த இரண்டு மாதங்களாக தொடர் நீர்வரத்து காரணமாக அணை முழு கொள்ளளவு எட்டி நிரம்பியது. தொப்பூரிலிருந்து பொம்மிடி பகுதிக்கு தொப்பையாறு அணையை ஒட்டி தார்சாலை செல்கிறது.

 

இந்த சாலையில் பேருந்துகள் கனரக வாகனங்கள் பள்ளி கல்லூரி வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் தினமும் அதிக அளவில் பயணிக்கும் அளவிற்கு பிரதான சாலையாக இருந்து வருகிறது. இந்நிலையில் தொப்பையாறு அணைக்கு தொடர்ச்சியாக நீர்வரத்து இருந்ததாலும் அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியதாலும், அணையின் தண்ணீர் சாலையின் இருபுறமும் தேங்கி நிற்கிறது. இதனால் அணையை ஒட்டி உள்ள சாலையின் பக்கவாட்டு சுவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதால் மண் அரிப்பு ஏற்பட்டு தொப்பூர்-பொம்மிடி சாலையின் ஒரு பகுதி உடைந்து சரிந்து தண்ணீரில் மூழ்கியது. அதனை அடுத்து வாகனங்கள் ஏதும் உடைந்த சாலையில் சிக்காத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டன. 



அதனைத் தொடர்ந்து இன்று சாலையின் மற்றொரு பகுதியும் உடைய தொடங்கியுள்ளது. இவை எந்த நேரத்திலும் தண்ணீரும் மூழ்கும் அபாயம் உள்ளதால் பேருந்து போக்குவரத்து கனராக வாகனங்களின் போக்குவரத்து என அனைத்தும் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் பிரதான முக்கியமான சாலையாக இச்சாலை இருப்பதால் தற்பொழுது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களும் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே உடைந்து இருந்ததை சரியாக சீரமைக்காததும் தற்போது தண்ணீரில் மூழ்கியதற்க்கு முக்கிய காரணமாகும். இந்த நிலையில் மற்ற ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இதில் மாற்று சாலைக்கான ஏற்பாடுகள் ஏதும் செய்யாமல் பிரதான சாலையாக விளங்கிய பகுதியை தற்பொழுது முழுமையாக தடைசெய்யபட்டதால் அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பொது மக்களின் நலன் கருதி மாற்று பாதையை ஏற்படுத்தி தர வேண்டும். அதேபோல் அணைப்பகுதி ஒட்டியுள்ள சரிந்து கிடக்கும் சாலையை போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.