தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்தில் இருந்து வனத்தை ஒட்டிய விளைநிலங்களில் கடந்த பல மாதங்களாக யானைகள் அவ்வப்போது நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இவ்வாறு வெளியேறும் யானைகளை வனப்பகுதிக்குள் இடம்பெயரச் செய்ய தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், இந்த யானைகள் தொடர்ந்து இப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளன.

 

ஓரிரு யானைகளுடன் இணைந்து விளைநிலங்களில் சேதங்களை ஏற்படுத்தி வந்த மக்னா யானை ஒன்று கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு முதுமலை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த மக்னாவுடன் தருமபுரியில் சுற்றிவந்த ஒற்றை ஆண் யானை கிராமங்கள், விளைநிலங்களில் அவ்வப்போது நுழைவதும், வனத்துக்குள் செல்வதுமாக உள்ளது.

 

இதுதவிர, மாரண்ட அள்ளி அருகே 2 குட்டிகளுடன் 2 பெண் மற்றும் 1 ஆண் என 5 யானைகள் ஏரிகளில் முகாமிட்டு குளித்தும், விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியும் வந்தது. இவ்வாறு கடந்த ஓராண்டுக்கும் மேலாக பாலக்கோடு வனச்சரக பகுதியையொட்டி அச்சம் ஏற்படுத்தி வரும் யானைகள் வெளியேறாதபடி தடுக்க வேண்டும் என விவசாயிகளும், கிராம மக்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். 

 

ஆனாலும், வனத்துறை சார்பில் யானைகளின் நடமாட்டத்தை தடுக்க தற்காலிக தீர்வு மட்டுமே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாலக்கோடு வட்டம் காளிகவுண்டன் கொட்டாய் அருகிலுள்ள பாறைக் கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி நேற்று முன் தினம் இரவு 2 பெண் மற்றும் 1 ஆண் என மொத்தம் 3 யானைகள் உயிரிழந்தன. இந்த யானைகளுடன் வந்த 2 குட்டி யானைகள் அப்பகுதியிலேயே தவிப்புடன் சுற்றி வந்தன. யானைகள் மின்வேலியில் சிக்கிய தகவல் அறிந்த தருமபுரி வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலர் வின்சென்ட், தருமபுரி மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு உள்ளிட்டோர் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் முகாம் அமைத்தனர். 



 

மேலும், வனத்துறைக்கான கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். யானைகள் உயிரிழந்த பகுதியைச் சுற்றி துணிகளால் மறைவு உருவாக்கி பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர், அப்பகுதியிலேயே பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு யானைகளின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. மேலும், விவசாய நிலத்துக்கு சட்ட விரோதமாக மின் வேலி அமைந்திருந்த விவசாயி முருகேசன்(50) என்பவரை பாலக்கோடு போலீஸார் கைது செய்தனர்.

 

மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் விலங்கு நல ஆர்வலர்கள், சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 

கிராம மக்கள் அஞ்சலி :

 

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானைகளின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அதே இடத்தில் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. யானைகளை அடக்கம் செய்த இடத்தில் சுற்று வட்டார கிராம மக்கள் மஞ்சள் பொடிகள், மலர்களை தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திச் சென்றனர்.

 

மேலும்  உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட இடத்தில், ஒரு அடி அளவிற்கு ரத்தக்கராய் படிந்த மண் யானையுடன் சேர்த்து அடக்கம் செய்யப்படவுள்ளது. மேலும்  மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளுக்கு நோய் பரவும் என்ற அச்சத்தை போக்க, நல்லடக்கம் செய்த பிறகு  சுண்ணாம்பு மற்றும் கிரிமி நாசினிகள் இன்றும், நாளையும் தெளிக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து தாயை இழந்து பரிதவிக்கும் இரண்டு குட்டி யானைகளையும்  பாதுகாப்பாக மீட்டு, இரண்டு வயது உள்ள யானையை, யானைகள் அதிகமாக உள்ள ஓசூர் போன்ற பெரிய வனப்பகுதியில் யானைகள் கூட்டத்தை விடவும், சிறிய யானையை முகாம்களில் விடுவதற்கும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.