சேலம் மாவட்டத்தில் வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஹோலிப்பண்டிகை உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது. குறிப்பாக, சேலம் நாராயணநகர், தேவேந்திரபுரம், வீரபாண்டியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வட இந்தியர்கள் குடும்பம்குடும்பமாக சேர்ந்து ஹோலிப் பண்டிகையை கொண்டாடினர். ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை பூசி ஹோலிப்பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மேளதாளங்களின் இசைக்கு நடனமாடி ஒருவருக்கொருவர் வண்ணங்களை பூசிக்கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 



விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரமெடுத்து இரணிய மன்னனை வதம் செய்து பிரகலாதனை காக்கும் கதையை நினைவுகூறும் விதமாக ஹோலித்திருநாளை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர் வட இந்தியர்கள். இதில் சேலம் துணை ஆட்சியர்( பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி கலந்துகொண்டு ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடினர்.  


நிகழ்ச்சியில் சிறப்பு உரையாற்றிய சேலம் துணை ஆட்சியர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, தமிழ்நாட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்த மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என வதந்திகள் பரவி வருகின்றது. இது முற்றிலும் தவறானது. நாம் அனைவரும் இங்கு சகோதரத்துவத்தோடு வாழ்ந்து வருகிறோம். இந்த ஹோலி பண்டிகை தினத்தில் அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும். நமக்கு எதுவும் ஆகாமல் தமிழ்நாட்டு மக்களும் தமிழக அரசும் பார்த்துக் கொள்ளும் என்று கூறினார்.



இதுகுறித்து வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "ஹோலி பண்டிகை என்பது நமது வாழ்க்கையில் வண்ணங்கள் நிறைய கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் சேலம் மாவட்டத்தில் மகாராஷ்டிரா ராஜஸ்தான் பீகார் ஒரிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த ஆண்டு ரசாயனம் களவாத சாய பொடிக்கலை தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறோம். அதேபோன்று இந்த ஆண்டும் எந்தவித தடங்களும் இல்லாமல் மகிழ்ச்சியோடு ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகிறோம். சமீப காலமாக தமிழகத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என வதந்திகள் பரவி வருகிறது. நாங்கள் அனைவரும் ஒற்றுமையோடு தமிழகத்தில் தொழில் செய்து வருகிறோம். தமிழர்கள் என்றும் எங்களை கைவிட்டது இல்லை. நாங்கள் எங்கள் ஊரில் இருப்பதைவிட பல மடங்கு மகிழ்ச்சியாக தமிழகத்தில் இருக்கிறோம்" என்று கூறினார்.