தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட ஜருகில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அஜ்ஜிபட்டி, மேற்கத்தியான் கொட்டாய், பரிகம், ஈசல்பட்டி, பூரிகல் உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். ஜருகு பகுதியில் உள்ள அஜ்ஜிப்பட்டி கிராமத்தில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டோர் மது போதைக்கு அடிமையாக இருந்தனர்.  அதையறிந்த உலக சமுதாய சேவா சங்கத்தின் சார்பில் கிராமத்தை தத்தெடுத்து அங்குள்ள பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், மகளிர் என ஆயிரம் நபர்களுக்கு வேதாத்திரி ஸ்கை யோகா பயிற்சி மூலம் பல்வேறு யோகா பயிற்சி கற்றுக் கொடுக்கப்பட்டது. அந்த கிராமத்தை அமைதி கிராமமாகவும் முன்மாதிரியான கிராமமாகவும் மாற்றினர். கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்று நோயால் தொய்வு ஏற்பட்டிருந்த அந்த கிராமத்தில் மீண்டும் ஸ்கை யோகா தொடங்கப்பட்டது.



 

அதனையடுத்து கடந்த 3 மாதங்களாக ஜருகு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 450 பேருக்கு உடலுக்கான எளிய முறை உடற்பயிற்சி, உடலுக்கான காயகல்ப பயிற்சி, மனதிற்கான ஆக்கினை சாந்தி, துரியன் என்ற தியான பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது. மேற்கண்ட பயிற்சியினால் மாணவ, மாணவிகள் ஆசிரியர் நடத்தும் பாடங்களை, மனதை ஒருநிலைப்படுத்தி கவனிக்கும் திறமை உள்வாங்கி மனதில் பதிய வைக்கும் திறமை, மனதில் உள்ளதை மீண்டும் வெளியில் கொண்டு வந்து, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெரும் திறமையும் மற்றும் ஒழுக்கமும் மேலோங்கி இருந்தது. அதன் அடிப்படையில் ஆர்வமுள்ள 70 மாணவர்களை தேர்ந்தெடுத்து ஆழியாறு திருக்கோவிலுக்கு அழைத்துச் சென்று பல்வேறு பயிற்சிகள் மற்றும் பிரம்மஞான பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டது. 

 

அதனையடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளை இன்று பேருந்து மூலம் ஆழியாறு அறிவு திருக்கோவிலுக்கு ஸ்கை யோகா பேராசிரியர் வெங்கடேசன் மற்றும் குமரவேல் ஆகியோர் தலைமையில் பிரம்ம ஞான பயிற்சிக்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக பயிற்சிக்கு செல்லும் மாணவ மாணவிகள் தங்கள் பயின்று வரும் பள்ளியில் ஒன்று கூடி ஜாதி, மத பேதம் இன்றி அனைவரும் நலமுடன் வாழ கூட்டு தியான பயிற்சிகளை மேற்கொண்டனர். பிரம்ம ஞான பயிற்சிக்கு செல்லும் மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைமையாசிரியர் பரமசிவம் ஆசிரியை செண்பகவல்லி, ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி மற்றும் பேராசிரியர்கள் பழனிச்சாமி மாதுலிங்கம் சுமதி சுப்பிரமணி லலிதா ஊர் பொதுமக்கள் ஆகியோர் வழிய அனுப்பி வைத்தனர்.