தருமபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த ஆறு பேரை கைது செய்து 60 லிட்டர் சாராயம், 160 லிட்டர் ஊரல் அழிக்கப்பட்டு காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினர் தீவிரமாக கள்ள சாராய ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக காவல் துறையினர் தீவிர கள்ள சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏரியூர் அடுத்த நெருப்பு கிராமத்தில், ஊருக்குள்ளே கள்ள சாராயம் காய்ச்சி வந்த வீட்டை காவல் துறையினர் சுற்றி வளைத்தனர். அப்பொழுது சாராயம் காய்ச்சி வந்த இரண்டு பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்நிலையில் அங்கு வீட்டின் அருகே போடப்பட்டிருந்த 30 லிட்டர் சாராய ஊரல்களை மற்றும் 15 லிட்டர் கள்ள சாராயம் ஆகியவற்றை கைப்பற்றி காவல் துறையினர் அதே இடத்தில் அழித்தனர். மேலும் ஊரல் போட்டு வைத்திருந்த இடத்தில் அருகில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கி ஒன்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் கள்ள சாராயம் காய்ச்சி வந்த முருகேசன், சாந்தா ஆகிய இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும், அரூர் அடுத்த எஸ் பட்டி பகுதியில் காவல் துறையினர் நடத்திய சோதனையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த வைரமலை என்பவரை கைது செய்து 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய சுப்புராஜ், உண்ணாமலை ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இதே போல் பாப்பாரப்பட்டி பகுதியில் தனியார் கல்லூரியின் பின்புறத்தில் கள்ள சாராயம் காய்ச்சி வந்த அண்ணாமணி என்பவரை கைது செய்து 30 லிட்டர் சாராய ஊழல்களை காவல் துறையினர் அழித்தனர். மேலும் கோட்டைப்பட்டி அடுத்த வேலனூர் பகுதியில் அம்பாயிரம் என்பவர், தோட்டத்தில் கள்ள சாராயம் காய்ச்சி விற்பனை செய்த நிலையில் அம்பாயிரத்தை கைது செய்து, சாராய பாக்கெட்டுகளையும் காவல் துறையினர் அழித்தனர். இது போல் பாப்பிரெட்டிபட்டி, பொம்மிடி பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்த, குமரேசன், ஶ்ரீதர், சண்முகம் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் கள்ள சாராயம் காய்ச்சியவர்கள் மற்றும் விற்பனை செய்தவர்கள் என 29 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் ஆறு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 60 லிட்டர் சாராயம் மற்றும் 120 லிட்டர் ஊரல்களை பறிமுதல் செய்து காவல் துறையினர் அழித்தனர்.