தருமபுரி மாவட்டம் உங்காரனஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட த.குளியனூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகள் மேல்படிப்பு படிக்க அருகே உள்ள உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு நடந்து சென்று படித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்கு பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு  அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது விவசாய நிலங்களை  பள்ளிக்கு தானமாக வழங்கியுள்ளனர். ஆனால் பள்ளிக்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனை தொடர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டு சுமார் 1 கோடியே 36 லட்சம் மதிப்பில் புதிய பள்ளிக்கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
 
தற்போது பள்ளி செல்ல சரியான பாதை வசதி இல்லாததால் இப்பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் ஆசிரியர்களும் விவசாய நிலம் வழியாக பெரும் சிரமத்திற்கு இடையில் நடந்து சென்று வருகின்றனர். மழைக் காலங்களில் சேறும் சகதியாக உள்ள அந்த ஒத்தையடிபாதையில் மாணவர்களும், ஆசிரியர்கள் நடந்து செல்லும் போது சிலர் கால் தவறி கீழே விழுந்துள்ளானர்.
 
மேலும் அப்பள்ளிக்கு சுற்றுசுவர் இல்லாததால் பள்ளி வகுப்றைகளில் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் நடமாடுவதால் பள்ளி மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் வெறும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். இதனால்அரசு புதியதாக கட்டிக்கொடுத்த பள்ளிக்கு செல்லும் வழியில்  சுமார் 700 மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்  கடந்த 5 ஆண்டுகளாக அரசுக்கு மாவட்ட நிர்வாகத்திற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தொடர்ந்து கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். இது குறித்து தமிழக முதல்வருக்கு கூட மனு அளித்தும் பயன்இல்லை. 
 
இதனை தொடர்ந்து குளியனூர்  சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த  கிராம மக்கள் ஒன்று சேர்ந்து
சொந்த செலவில் இப்பள்ளிக்கு சென்று வர, சாலை அமைக்க முடிவெடுத்து, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒரு சில விவசாயிகள் நிலத்தில் வழி விட முடியாது என மறுப்பு தெரிவித்தனர். 
இதனை தொடர்ந்து கிராம மக்கள் ஒன்றிணைந்து, ஜேசிபி இயந்திரம், டிராக்டர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன், ஒத்தையடி பாதையில் மண் கொட்டி சாலை அமைத்தனர். அப்பொழுது பன்னீர்செல்வம் என்பவரின் விவசாய நிலத்தில் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சிறுது நேரம் பரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
 
அப்பொழுது தங்கள் நிலத்தில் வழி கொடுக்க முடியாது, எங்களை கேட்காமல், அராஜகமான முறையில் பயிர்களை அழித்து சாலை அமைத்துள்ளனர். எங்கள் நிலத்திற்கு செல்லும் பாதைக்கு சாலை அமைத்து கொடுத்தால், வழி விடுவதாக தெரிவித்தனர். தொடர்ந்து காவல் துறையினர் பன்னீர்செல்வம் தரப்பினரிடம் 15 நாட்கள் கால அவகாசம் கேட்டு, தங்களின் கோரிக்கைக்கு முடிவு எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து மண் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. நீண்ட நாட்களாக பள்ளிக்கு சாலை வசதி இல்லாமல் இருந்த நிலையில், தற்போது பொதுமக்களின் முயற்சியால் பள்ளிக்கு சாலை வசதி கிடைத்திருப்பதால், ஆசிரியர்களும், பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.