பாப்பாரப்பட்டி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தண்ணீர் தொட்டியில் துர்நாற்றம் வீசியதாக மாணவர்கள் புகார் அளித்த நிலையில், மனித மலமா? பறவை எச்சமா?  என தடவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள  பனைக்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 120க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களின் கழிவறை பயன்பாட்டிற்காக தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது‌. இந்த  சின்டெக்ஸ் தொட்டியில் இன்று காலை துர்நாற்றம் வீசியதாக மாணவர்கள் பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர். 



 

இதனை அடுத்து பள்ளி ஆசிரியர் கணேசன் தொட்டியை ஆய்வு செய்தபோது தொட்டியில் துர்நாற்றம் வீசியது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து பாப்பாரப்பட்டி காவல் துறையினர் மற்றும் பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் துளசிராமன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு தொட்டியை சுத்தம் செய்துள்ளனர். தொட்டிலிருந்த தண்ணீர் ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர். தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதா அல்லது பறவை  எச்சங்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பள்ளியில் இயங்கும் தடயவியல் துறையினர், தண்ணீர் தொட்டி, தொட்டி இருந்த இடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். மேலும் கழிவறை பயன்பாட்டிற்கு வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் மலம் இல்லை, துர்நாற்றம் வீசுவதால், சுத்தம் செய்து எடுத்து வைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி அருகே அரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் துர்நாற்றம் வீசியதால், பள்ளிக்கு காவல் துறையினர், அதிகாரிகள் விசாரணை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.