சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையம் 146 அடி உயரத்தில் உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. மலேசியாவிலுள்ள சிலையை விட 6 அடி அதிகமாக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த முத்துமலை முருகன் கோவிலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். முத்துமலை முருகன் கோவிலில் அமைந்துள்ள யாக மண்டபத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. 



இதையடுத்து லிப்ட் மூலமாக முருகன் சிலையில் வேல் பகுதிக்கு சென்று பால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடத்தினார். இதனிடையே முத்து மலை கோவில் நிர்வாகம் சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கும்பமரியாதை கொடுக்கப்பட்டது. குறிப்பாக முத்துமலை முருகன் ராஜகோளத்தில் கம்பீரமாக காட்சியளித்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முத்துமலை முருகனை தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கோவிலை சுற்றி தங்கத்தேர் இழுத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமான பங்கேற்றனர்.


 


முன்னதாக, சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு முத்துமலை முருகன் திருக்கோவில் அமைந்துள்ள கோவில் சாலையை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடி நிதி ஒதுக்கி, பேவர் பிளாக் கற்கள் பதிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆத்தூர் நகராட்சி 23 வது வார்டு அண்ணா தெருவில் பாலம் கட்ட ரூபாய் பத்து லட்சம் மற்றும் 11 வது வார்டு நீர்த்தேக்க தொட்டி கட்ட 13.5 லட்சமும், ஆர்சி அரசு உதவி பெறும் பள்ளிக்கு ரூபாய் பத்து லட்சத்தில் கழிப்பறை வசதியும், ஆழ்துளை கிணறு அமைக்க ரூபாய் ஆறு லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டது. 



ஆத்தூர் முல்லைவாடி காலனியில் ரூபாய் 13 லட்சத்தில் ரேசன் கடை மற்றும் பயணிகள் நிழற்கூடம், பள்ளிக்கூட வகுப்பறை கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்வித்திட்ட பணிகள் துவங்க மொத்தம் ரூபாய் 3 கோடியே 74 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் நிதியுடன் சேர்த்து மொத்தம் ரூபாய் 4.74 கோடி திட்டப்பணிகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்நாட்டி துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.