கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு கெயில் நிறுவன குழாய் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த கெயில் குழாய் அமைப்பதற்கு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, பாலக்கோடு பகுதிகள் வழியாக கிருஷ்ணகிரி மாவட்டம் எல்லைக்குள் நுழைகிறது.
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் இண்டூர் பகுதிகளில் நேற்று முதல் கெயில் நிறுவன குழாய் அமைப்பதற்கு நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் மற்றும் கெயில் நிறுவன ஊழியர்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக அளவிடும் பணி நடைபெற்று வந்தது. அப்பொழுது விவசாயிகள் ஒன்றிணைந்து இந்த திட்டத்தினை சாலை மார்க்கமாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பாலவாடி என்ற இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கரியப்பனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி மகன் கணேசன்( 43) என்பவர்க்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலத்தின் வழியாக கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு நிலம் அளவீடு செய்யும் பணிக்காக கெயில் நிறுவனத்தினர் மற்றும் அதிகாரிகள் நேற்றும் இன்றும் வந்திருந்தனர். இந்நிலையில் போராட்டம் நடந்த இடத்திலிருந்து தனது நிலத்துக்கு சென்றுள்ளார். தொடர்ந்து கணேசன் தனது வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் சென்று உடலை மீட்டனர். தொடர்ந்து கெயில் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி இறந்ததாக கூறி, இறந்த விவசாயி கணேசனின் உடலை தருமபுரி-ஒகேனக்கல் சாலையில் வைத்து, சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தருமபுரி எஸ்பி சி.கலைச்செல்வன், சார் ஆட்சியர் சித்ரா விஜயன் உள்ளிட்டோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் கெயில் திட்டம் சாலை மார்க்கமாக அமைக்க வேண்டும், உயிரழந்த விவசாயி உடும்புப் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் தற்போது குழாய் செல்லும் பாதையை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கை அரசின் பார்வைக்கு எடுத்து செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இறந்தவரின் சடலத்தை வைத்து விவசாயிகள் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.