தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து உச்சம்பட்டி, மோட்டூர் சென்னம்பட்டி, அடிலம் உள்ளிட்ட  கிராமங்கள் வழியாக காரிமங்கலத்திற்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் 17 ஆவது நெம்பர் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லவும் பயன் உள்ளதாக இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக அப்பேருந்து நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்ததையடுத்து எப்போதும் போல் இல்லாமல் அப்பேருந்து வேறு வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

 



 

இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் 4 கிலோ மீட்டர் தொலைவு நடந்து வந்து திப்பம்பட்டியில் இருந்து காரிமங்கலம் செல்லும் பேருந்தில் ஏறி செல்கின்றனர். ஏற்கெனவே அப்பேருந்தில் அதிக பயணிகளை ஏற்றி வரும் நிலையில் கூடுதலாக மாணவ, மாணவிகள் ஏறுவதால் அதிக கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனை பயன்படுத்தி நடத்துனர் பள்ளி மாணவிகளிடம்  தவறாக நடந்து கொள்வதாகவும், பல முறை சம்மந்தபட்ட அரசு அதிகாரிகளிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  ஆனால் பேருந்து நடத்துனர் தொடர்ந்து பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து வருவதால், தொடர்ந்து பேருந்தில் பயணம் செய்யம் பள்ளி மாணவிகள் மிகவும் அச்சத்துடன், தினமும் பயணம் செய்து அவதிப்பட்டு வருகின்றனர். 

 



 

இந்நிலையில் போக்குவரத்து நிர்வாகம் நடத்துனர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இன்று மொரப்பூர் காரிமங்கலம் சாலையிலுள்ள மோட்டூர் பேருந்து நிலையத்தில், சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்,  தவறாக நடந்து கொள்ளும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தங்களது வழி தடத்தில் இயங்கி வந்த பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என கையில் பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பினர்.



 

தொடர்ந்து மாணவர்களின் சாலை மறியலால் அரூர்-கிருஷ்ணகிரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இந்த தகவல் அறிந்து வந்த காரிமங்கலம் காவல் துறையினர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவிகளிடையே சமரச பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், தொடர்ந்து பழைய வழித்தடத்தில் அரசு பேருந்தை இயக்கவும், நடத்துனர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு, மாணவிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.