தருமபுரி மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் உயர் கல்வி படிப்பை தொடர ஒரு நாள் கல்லூரி சுற்றுப்பயணத்தை மாவட்ட ஆட்சியர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 107 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி கல்லூரி ஆர்வமூட்டும் வகையில் அருகிலுள்ள கலை கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரி, வேளாண் ஆராய்ச்சி மையம், கால்நடை பராமரிப்பு ஆராய்ச்சி மையங்களுக்கு களப்பயணம் இன்று துவங்கியது. இந்த களப் பயணத்திற்கு 15 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளில் சென்றனர். இதற்காக ஒவ்வொரு அரசு பள்ளியிலிருந்து தலா 10 மாணவர்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு 1070 மாணவர்கள் களப் பயணம் சென்றனர். இந்த களப்பயணம் நிகழ்ச்சியை தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த களப் பயணத்திற்கு செல்லும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த, மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள், பனிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு மேற்படிப்புக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி விடக் கூடாது. இதில் குறிப்பாக மாணவிகள் மேற்படிப்பை தொடங்குவதற்கு ஆர்வம் ஏற்படுத்த வேண்டும். தங்களது மேற்படிப்பை விருப்பமுள்ள பாடங்களை தேர்ந்தெடுத்து பயில வேண்டும் என்றும், உங்களை மேல்படிப்பு படிக்க ஊக்கபடுத்தும் வகையில் தமிழக அரசு புதுமை பெண் திட்டம் என்ற மகத்தான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகிறது. அதனை நீங்கள் சரியாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இக்களப் பயணத்தில் செல்லும் மாணவர்கள் கல்லூரிகளில் உள்ள பல்வேறு துறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள், கலையரங்கம், விளையாட்டு திடல் மற்றும் மேலும் பல வசதிகளை அறிந்து கொள்ள உள்ளனர். இதன் மூலம் மாணவ, மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்கு கல்லூரி செல்ல வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். இதற்காகவே அரசு சார்பில் ஒரு நாள் கையில களப் பயணம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த ஒரு நாள் களப் பயணத்திற்கு அரசு பள்ளி மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், குணசேகரன்,மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், பள்ளித் துணை ஆய்வாளர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்