தமிழகம் முழுவதும் நவம்பர் 25 முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சமூக நலத்துறை மற்றும் பெண்கள் உரிமை துறை சார்பிலும், மகளிர் திட்டத்தின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு பெண்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் பல்வேறு வகையான விழிப்புணர்வு வண்ண கோலங்கள் வரையப்பட்டுள்ளது. இதில் மகளிர் திட்டத்தைச் சார்ந்த பெண்கள் அரிசி மாவு, கோலப்பொடி, உப்பு, காய்கறிகள், பூக்கள் உள்ளிட்டவற்றை கொண்டு கண்களை கவரும் வகையில் வண்ண கோலம் இட்டு இருந்தனர்.
இந்த கோலத்தில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் கல்வி அவசியம், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுப்போம், பெண் வன்கொடுமையை ஒழிப்போம், குடும்ப வன்முறையை தடுப்போம், ஆண் பெண் சமம், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு 1098 என்ற இலவச உதவி என்னை பயன்படுத்த வேண்டும், குழந்தை திருமணத்தை ஒழிப்போம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை வண்ணக்கோலத்தில் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு கோலத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி பார்வையிட்டார். மேலும் சிறந்த முறையில் விழிப்புணர்வு கோலமிட்ட மகளிர் திட்ட பெண்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி பாராட்டினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 18,000 கன அடியிலிருந்து 16,000 கன அடியாக குறைந்தது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பொழிந்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. இதனால் தமிழக எல்லையன பிலிகுண்டுலுவுக்கு, நீர்வரத்து வினாடிக்கு 18,000 கன அடி வரை நீர்வரத்து அதிகரித்து இருந்தது. மேலும் மழை குறைந்ததால், தொடர்ந்து நீர்வரத்து சரிந்து வருகிறது. இன்று காலை வினாடிக்கு 18,000 கன அடியிலிருந்து 16,000 கன அடியாக குறைந்தது.காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தாலும், ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி, சினி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், தொடர்ந்து நீர்வரத்து குறையும் என மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.