தருமபுரி நகரில் குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் விரிவுப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் பேச்சுவார்த்தைக்கு பின் பணிகள் தொடங்கப்பட்டது.

 

தருமபுரி நகராட்சி 21வது வார்டுக்கு உட்பட்ட வெள்ளிபேட்டை தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வழியாக ஏ.கொல்லப்பட்டி, மொடக்கேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்ல மக்கள் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பழமையான வீடுகள் என்பதால், கழிவு நீர் கால்வாய் உயரமாகவும், வீடுகள் கால்வாயை விட தாழ்வாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அகலப்படுத்தும் பணி நகராட்சி மேற்கொண்டு வருகிறது.



 

ஆனால் கழிவுநீர் கால்வாய் உயரம் அதிகரித்தால், வீடுகளின் தரைதளம் தாழ்வாக இருக்கும். இதனால் மழைக் காலங்களில் தண்ணீர் எளிமையாக வீடுகளுக்குள் நுழையும் அபாயம் இருந்து வருகிறது. எனவே இந்த பகுதியில் கால்வாய் கழிவுநீர் கால்வாய் விரிவாக்க பணியை மேற்கொள்ள வேண்டாம், இருக்கின்ற கழிவுநீர் கால்வாய் போதுமானது. அதனை முறையாக தூர்வாரினால் போதும் என கிராம மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனு கொடுத்துள்ளனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த கழிவு நீர் கால்வாய் விரிவாக்க பணி மேற்கொண்டால் தான், இதில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு பேருந்துகள் செல்வதற்கு வசதியாக இருக்கும். ஏனென்றால் சாலை குறுகலாக இருப்பதால், கழிவுநீர் கால்வாய் உயரப்படுத்தி அதன் மீது காங்கிரீட் தளம் அமைத்தால், சாலையின் தூரம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.



 

இதனை அடுத்து நேற்று திடீரென நகராட்சி சார்பில் ஜேசிபி இயந்திரம் மூலம் கழிவுநீர் கால்வாயை விரிவுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த அந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள், கழிவுநீர் கால்வாய் விரிவுப்படுத்தும் பணியை கைவிட வேண்டும். இதனால் வீடுகளின் சுவர் பாதிக்கப்படும். அதேபோல் வீடுகளுக்குள் தண்ணீர் நுழையும் அபாயம் இருந்து வருகிறது. இந்த சாலையில் தற்பொழுது பள்ளி, பேருந்துகள் வந்து செல்கின்றன.  இதனால் பேருந்து செல்வதற்கு போதிய இடவசதி இருக்கிறது, கழிவு நீர் கால்வாய் மேல் காங்கிரீட் தளம் அமைத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் அதற்குரிய பதில் அளிக்காததால், திடீரென ஏ.கொல்லஹள்ளி, மொடக்கேரி செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த நகராட்சி நிர்வாக ஆணையர் புவனேஸ்வரன், வட்டாட்சியர் சரவணன்(பொறுப்பு), காவல்துறை ஆய்வாளர் ரங்கசாமி உள்ளிட்டோர் பொதுமக்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது தங்கள் பகுதியில் வீடுகள் எல்லாம் தாழ்வாக இருப்பதால், கழிவு நீர் கால்வாய் மேலும் உயரப்படுத்தினால், கழிவுநீர் மழைக்காலங்களில் வீடுகளுக்குள் நுழையும். இதனால் கழிவுநீர் கால்வாயை விரிவுப்படுத்தும் பணியை கைவிட்டு, கழிவுநீர் கால்வாய் முழுவதுமாக கான்கிரீட் அமைத்தால், சாலை தூரம் அதிகரிக்கும் என வலியுறுத்தினர்.  இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, கழிவுநீர் கால்வாய் விரிவுப்படுத்தி கான்கிரீட் தளம் அமைத்து கொடுப்பதாகவும், பாதிப்பு ஏற்படாத வகையில் பணி மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து காவல் துறை பாதுகாப்பின் உடன் கழிவுநீர் கால்வாய் விரிவுப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. இந்த சாலை மறியலில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.