சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள வலசையூர் பகுதியை சேர்ந்த சபரி சங்கர் என்பவர் சீலநாயக்கன்பட்டி, அம்மாபேட்டை, ஆத்தூர் மற்றும் தர்மபுரி, அரூர் உட்பட 11 இடங்களில் நகைக்கடை நடத்தி வந்தார். மாத சீட்டு திட்டம், பழைய நகைகளுக்கு புதிய நகை வழங்கும் திட்டம் என கவர்ச்சிகரமான திட்டங்களை சபரி சங்கர் அறிவித்தார். இதனை நம்பி ஏராளமானவர்கள் நகை திட்டத்தில் சேர்ந்து பணத்தை செலுத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் அனைத்து கடைகளையும் திடீரென மூடிவிட்டு பல கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணத்துடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் தீபாவளி நேரத்தில் சீட்டு போட்டவர்கள், நகை எடுக்க வந்தவர்கள், நகைக்கடைகள் பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் அயோத்தியபட்டினம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் நகை சீட்டு மற்றும் சகோதரியின் திருமணத்திற்கு நகை வாங்குவதற்காக 11 லட்சம் செலுத்தி இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் ஜெய்சல்குமார் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதனையடுத்து நகைக்கடை உரிமையாளர் சபரி சங்கர், மேலாளர்கள் கவின், அஜித் ஆகியோர் மீது மோசடி உட்பட ஆறு பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நிறுவனத்தின் நகை பணத்தை முதலீடு செய்து ஏமாற்றமடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் மனுக்கள் அதிகளவில் குவிந்து வருகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், புது புதிதாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் கிளை ஆரம்பிக்க ஆரம்பித்ததால் நம்பி நகை மற்றும் பணத்தை செலுத்தியதாக தெரிவித்தனர். தங்க நகை சேமிப்பு திட்டம் உள்ளிட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்து ஒவ்வொருவரிடமும் பல லட்சம் பணம் மற்றும் நகையை முதலீட்டை பெற்றுக் கொண்டனர். ஆனால் இதுவரை எங்களுக்கு பணமும் நகையும் வரவில்லை நிறுவனத்திற்கு சென்று பார்த்தபோது நிறுவனம் பூட்டிவிட்டு, தலைமறைவாகிவிட்டதாக பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிவித்துள்ளனர்.
எங்களை போன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நகையை பணத்தையும் இழந்து தவிக்கின்றனர். சுமார் 100 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருப்பதாகவும், வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்காக சேமிப்பாக செலுத்தியதை ஏமாற்றிவிட்டதாக வேதனை தெரிவித்தனர். எனவே இழந்த பணத்தை காவல்துறையினர் மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.