தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிலூர் கோபாலம்பட்டி பகுதியில் நியாய விலை கடை வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 2006ம் ஆண்டு முதல் 16 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போதும் அதன் பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போதும் வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்களிடம் தொடர்ந்து இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.  இந்நிலையில் தருமபுரி சட்டப்பேர உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று சட்டமன்றத்தில் கோவிலூர் பகுதிக்கு புதிய நியாய விலை கடை தனியாக பிரித்து வழங்க வேண்டும் என்றும், இப்பகுதி மக்கள் நல்லம்பள்ளி சென்று நியாய விலை பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு ஒரே நியாய விலை கடைகளில் பொருள் விநியோகம் செய்வதால் கூட்ட நெரிச்சல் ஏற்படுவதாகவும் கூறி, கோவிலூர் அல்லது கோபாலம்பட்டி பகுதியில் நியாய விலை கடை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

 



இதனை தொடர்ந்து கடந்த மாதம்  உணவுத்துறை அமைச்சர் மற்றும் உணவு மற்றும் நுகா்வோர் பாதுகாப்புதுறை செயலாளர் ராதாகிருஷ்ணனை நேரில் சென்று வலியுறுத்தியுள்ளார். இதனை அடுத்து நல்லம்பள்ளி கடையிலிருந்து 333 குடும்ப அட்டைகளை தனியாக பிரித்து கோவிலூர் பகுதியில் நியாய விலை கடையை திறக்க தமிழக அரசு ஆணையிட்டது. இதனை அடுத்து இன்று புதிய நியாய விலை கடையை தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் திறந்து வைத்து,பொதுமக்களுக்கு நியாய விலை கடை பொருட்கள் வழங்கினார். இதனையடுத்து 16 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த சட்டமன்ற உறுப்பினருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.



 

 

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 8,000 கன அடியாக குறைந்தது.

 

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பொழிந்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்ததால், நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 6,500 கன அடியாக இருந்தது. இந்நிலையில் நேற்று காலை, காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து வினாடிக்கு 10,000 கன அடியாக அதிகரித்து வந்தது. இதனால் தமிழக எல்லையன  பிலிகுண்டுலுவுக்கு, நீர்வரத்து தொடர்ந்து ஒரு வாரமாக சரிந்து வந்த நிலையில், நீர்வரத்து அதிகரித்தது. ஆனால் மீண்டும் இன்று குறைய தொடங்கி, காலை வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 8,000 கன அடியாக குறைந்தது.காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தாலும், ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி, சினி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், தொடர்ந்து நீர்வரத்து குறையும் என மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.