சேலம் மாநகராட்சி செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள மாதவராயன் செட்டி தெருவில் தங்க நகைக் கடை நடத்தி வருபவர் லால்டூ. இக்கடைக்கு நேற்று கேரள மாநிலம் திருச்சூர் சீராச்சி பகுதியை சேர்ந்த ஷேண்டோ வர்கீஸ் (39), திருச்சூர் பகுதியை சேர்ந்த விஷ்ணு (30), நெல்சன் (29) ஆகியோர் வந்துள்ளனர். அப்போது லால்டூவிடம் ஒரு கிலோ தங்கநகைகளை கொடுத்தனர். பின்னர் அந்த நகைகளுக்கு பதிலாக ஒரு கிலோ தங்ககட்டியாக தருமாறு கேட்டுள்ளனர். அதன்படி லால்டூ தங்ககட்டியை கொடுத்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்டு வெளியே வந்து சோதனை செய்து பார்த்துள்ளனர்.



அப்போது தங்ககட்டி இல்லை என்பதும் தங்க முலாம் பூசிய செம்பு கட்டி என்பதும் தெரியவந்துள்ளது. உடனே கடைக்கு வந்து லால்டூவிடம் மோசடி குறித்து கேட்டு கண்டித்துள்ளனர். அப்பொழுது லால்டூ நான் கொடுத்தது தங்ககட்டி தான், செம்பு இல்லை என பேசிக்கொண்டே வெளியே தப்பியோடியுள்ளார். இது குறித்து ஷேண்டோ வர்கீஸ் செவ்வாய்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் செவ்வாய்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கேரள வாலிபர்கள் உண்மையிலேயே தங்கக் நகைகளை கொண்டு வந்தார்களா? என்பது குறித்தும், லால்டூ எதற்காக கடையில் இருந்து தப்பியோடினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து லால்டூ நகைக் கடையில் பணிபுரியும் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தப்பியோடிய லால்டூவை தீவிரமாக காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் செவ்வாய்பேட்டை நகை கடை உரிமையாளர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.