தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வெள்ளக்கல் பகுதியில் இருந்து ஈசல்பட்டி வரை உள்ள சுமார் 7 கிலோமீட்டர் நீள சாலை உள்ளது. இந்த சாலை வழியாக அதிக அளவில் சரக்கு வாகனங்களும் பள்ளி கல்லூரி பேருந்துகள் மற்றும் விவசாய பொருட்கள் சந்தை படுத்துவதற்காக காய்கறிகள், பூக்கள், பால் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் வாகனங்கள் அதிக அளவில் பயணிப்பதால் குறுகிய சாலையாக இருப்பதால் வாகனங்கள் எளிதில் செல்வதற்கு ஏதுவாக சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

 

அதனை அடுத்து  பிரதம மந்திரி கிராம சாலைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் இச்சாலையை அகலப்படுத்தும் பணிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதில் ஏழு கிலோமீட்டர் நீளமுள்ள இச்சாலையை சுமார் 8 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அகலப்படுத்தும் பணி மற்றும் சிறு பாலங்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்குவதற்காக பூமி பூஜை போடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சாலை அகலப்படுத்தும் பணியை துவக்கி வைப்பதற்காக வந்த பொழுது கனமழை பெய்தது. அப்பொழுது மழையையும் பொருட்படுத்தாமல் எம்பி செந்தில்குமார் மற்றும் எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினர். மேலும் கொட்டும் மழையிலும் சாலை பணியை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.



 

தருமபுரி மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதால், இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கரவு, பகல்  இடைவிடாமல், மிதமான மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக, தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்திருந்தார். தொடர்ந்து இன்று இரண்டாவது தருமபுரி மாவட்டம் முழுவதும் பரவலாக மிதமான மழை விட்டு விட்டு பொழிந்து வந்தது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால், கடுங்குளிரால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல்,  இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் மூன்று நாட்களுக்கு கனமழை இருக்கும் என்று என்பதால் நீர்நிலைகள் நிரம்பி வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.