தருமபுரி அருகே அ.கொல்லஅள்ளி அடுத்த வேடியப்பன் திட்டு பகுதியை சேர்ந்த விவசாயி சதீஷ்குமார் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். தனது விவசாய நிலத்தில் மேற்கொள்ளப்படும் உழவு பணிகளுக்காக நாட்டின பசு மாடுகளை வளர்த்து வருகிறார். மேலும் ஜல்லிக்கட்டின் மீது கொண்ட ஆர்வத்தால் பசு மாடுகளோடு காளைகளையும் வளர்த்து வருகிறார். அந்த காளைகளுக்கு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அளவிற்கான பயிற்சிகளையும் கொடுத்து வருகிறார். மேலும் நாட்டின் மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது.



 

இந்த நிலையில் சதீஷ்குமாருக்கு திருமணம் நீச்சியிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சதீஷ்குமார்-பிரியங்கா என்ற இணையருக்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில்  இன்று  சென்னகேசவ பெருமாள் திருகோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும், அதிகமாக வளர்க்க வேண்டும் என்பதை, திருமணத்திற்கு வரும் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டிருந்தார்.

 

இதனையடுத்து அதிக  அளவில் தமிழகத்தில் நாட்டு மாடுகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தாங்கள் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரித்து, திருவிழாவிற்கு கொண்டு வந்து கோவில் வாசலில் நிறுத்தினர். இதனை தொடர்ந்து மணமேடைக்கு செல்வதற்கு முன், மணமக்கள் இருவரும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மரியாதை செய்தனர். இதனை தொடர்ந்து  திருமணத்தை நடத்தினர். 



 

தமிழ்நாட்டில் விவசாய பணிகளுக்காக நாட்டு மாடுகளை விவசாயிகள் வளர்த்து வந்தனர். ஆனால் நாளடைவில் நாட்டின மாடுகள் அழிந்து, தற்போது கலப்பினம் மாடுகளே அதிக அளவில் தமிழகத்தில் உள்ளது. இதனால் நாட்டு மாடுகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள்  குறைந்த அளவே உள்ளது. இதனை பாதுகாக்கவும், விவசாயிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக  எங்கள் திருமணத்தை, ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரித்து கொண்டு வந்துள்ளோம். தொடர்ந்து முதலில் காளைகளுக்கு மரியாதை செய்த பிறகு, நாங்கள் திருமணம்  செய்து கொண்டோம். மேலும் ஒவ்வொரு விவசாயிகளும் தங்கள் விவசாயத்துடன் சேர்த்து நாட்டு மாடுகளை வளர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி இளைஞர்கள், பொதுமக்கள் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க முன் வர வேண்டும் என சதீஷ் தெரிவித்தார். தமிழகத்தில் நாட்டின மாடுகளை வளர்க்கவும், ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து, நாட்டின் மாடுகளை பாதுகாக்க வேண்டும் திருமண விழவிற்கு, தான் வளர்க்கும் காளைகளை கொண்டு வந்த மணமகனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.