தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர்த் திருவிழா கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி சுவாமி நிலத்தில் புற்றுமுன் எடுத்தலும், கணபதி பூஜை, யாகசாலை பூஜைகளுடன் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

 

இதை தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடும், பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை சாலை விநாயகர் கோவிலில் இருந்து பால் குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் மேளதாளங்கள் முழங்க, ஏராளமான பக்தர்கள் தாழ் அழகு குத்தியும், காவடி எடுத்தும் ஆடி தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த ஊர்வலம் எஸ்.வி.ரோடு, கடைவீதி, பென்னாகரம் ரோடு வழியாக கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து கோவிலில் சாமிக்கு  பால் அபிஷேகமும், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இரவு 10 மணிக்கு சாமி திருக்கல்யாண உற்சவமும், இரவு 12 மணிக்கு பொன்மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது.  நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு விநாயகர் தேரோட்டமும், யானை வாகன உற்சவமும் நடைபெறவுள்ளது.



 

மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு வடம் பிடிக்கும் சிவசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச தேரோட்டம் திங்கட் கிழமை காலை 6 மணிக்கு  நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு வண்ண விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்ட தேரோட்டமும் நடைபெறும். இந்த விழாவையொட்டி திங்கள் அன்று காலை 7 மணிக்கு பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில் 10000 பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் விழாவும், மாலை 6 மணிக்கு ஏழைகள் அன்னதான கமிட்டி சார்பில் 10000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழாவும் நடக்கிறது. இந்த திருவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.



 

வருகிற 7-ம் தேதி வேடர்பறி குதிரை வாகன உற்சவமும், 8-ம் தேதி விழா கொடியிறக்கம் மற்றும் பூப்பல்லக்கு உற்சவமும், 10-ம் தேதி சயன உற்சவமும் நடக்கிறது. விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார், செயல் அலுவலர் ராதாமணி மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.