தருமபுரி மாவட்டம் வத்தல்மலை கடல் மட்டத்திலிருந்து 3,700 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலை கிராமத்தில் பெரியூர், ஒன்றிக்காடு, சின்னங்காடு, பால் சிலம்பு, நாயக்கனூர், மன்னாங்குழி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இயற்கையான குளிர்ந்த சூழ்நிலையில் மலைகள் நிறைந்த இந்த கிராமங்களில் காப்பி, கமலா, ஆரஞ்சு, பலா, ராகி, சாமை உள்ளிட்ட மழை பயிர்கள் பயிரிடப்படுகிறது. இங்கு வருடத்தில் பெரும்பாலான நாட்களில் இங்கு நல்ல மழை பெய்வதுடன் குளிர்ந்த காற்று வீசுகிறது. மேலும் 24 கொண்டை ஊசி வளைவுகளுடன் அமைந்துள்ள மலைப்பாதை இயற்கையான சூழ்நிலையில் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. ஆனால் சாலை மற்றும் போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் இந்த வத்தல்மலையை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்று தருமபுரி மாவட்ட பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு வத்தல்மலையை சுற்றுலா தளமாக அறிவித்து அங்கு சுற்றுலா மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது. தோட்டக்கலை துறை பூங்கா, படகு இல்லம், பார்வை கோபுரம் உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுலா வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் வத்தல்மலைக்கு 10 கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக வத்தலமலைக்கு செல்லும் மலைப் பாதையில் 10 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
மேலும் ஏராளமான இடங்களில் பாறைகள் சரிந்து சாலையில் கிடக்கிறது. சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கிறது. இதனால் போக்குவரத்து தடைபட்டு மலைப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கீழே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். தற்போதும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் மண்சரிவு ஏற்படலாம் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் சென்று வந்தனர். தற்போது ஏற்பட்டுள்ள மண்சரிவால் சுற்றுலா பயணிகள் யாரும் வத்தல்மலைக்கு செல்ல முன்வரவில்லை. இதேபோன்று தொடர் மழை காரணமாக புதிதாக போடப்பட்ட தார் சாலை ஆங்காங்கே பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக மலைப் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் தடுமாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
வத்தல்மலைக்கு தார் சாலை தரமானதாக போடப்படாததால் ஆங்காங்கே பழுதடைந்துள்ளது. தொடர்ந்து வாகனங்கள் சென்று வந்தால் இருக்கிற சாலையும் மேலும் மோசமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதே போன்று சாலை அமைக்கும் முன்பே எந்தெந்த இடத்தில் மண் சரிவு ஏற்படும் என்று திட்டமிடாமல் சாலை அமைத்து விட்டனர். இதனால் தற்போது பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தரமில்லாமல் போடப்பட்ட சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வத்தல் மலைக்கு செல்லும் மலைப்பாதையில் இனிவரும் காலங்களில் மண்சரிவு ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.