தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பருவதன அள்ளி  ஊராட்சிக்குள்பட்ட கிழக்கு கள்ளிபுரம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான தீர்த்தான் (60), மனைவி ரங்கம்மாள் (50). இருவருக்கும் மாதையன் என்ற மகனும் தனலட்சுமி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் கிழக்கு கள்ளிபுரம் பகுதியில் தீர்த்தான் மற்றும் ரங்கம்மாள் இருவரும் தனியாக வசித்து வந்தனர். தொடர்ந்து கணவன் மனைவி இருவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. தினமும் இருவரும் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு, இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மது அருந்திவிட்டு இருவரும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

 


 

அப்பொழுது ஆத்திரமடைந்த தீர்த்தான் அவருடைய மனைவி ரங்கம்மாளை கடுமையாக தாக்கியுள்ளார். தொடர்ந்து அருகில் இருந்த கல்லை எடுத்து மனைவி ரங்கம்மாளின் தலை மீது போட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ரங்கம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து விடிந்ததும், ரங்கம்மாள் இறந்து கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர், அவர்களுடைய மகனுக்கும், பென்னாகரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வந்த ரங்கம்மாள் மகன், தாயின் உடலை கண்டு கதறி அழுதார்.

 

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பென்னாகரம் காவல் துறையினர், சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பென்னாகரம் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, மதுபோதையில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவர் தீர்த்தானை, காவல் துறையினர் கைது செய்து, தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து மது போதையில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கணவனே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 



கீழ்மொரப்பூர் காப்புக் காட்டில் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவரை பிடித்து வனத் துறையினர்  50,000 அபராதம் விதித்தனர்.



தருமபுரி மாவட்ட வன அலுவலர் உத்தரவுபடி மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார்  தலைமையில், வனவர் எ.எம்.யாசின், வனக் காப்பாளர்கள் காளியப்பன், சுரேஷ், வனக் காவலர் சரித்திரன் ஆகியோர் இன்று அதிகாலை 04.30 மணியளவில் கீழ்மொரப்பூர் காப்புக்காடு வன விலங்கு தொட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதர் மறைவில் இருசக்கர வாகனத்தை மறைத்து நிறுத்தி விட்டு,  எக்ஸ்லேட்டர் ஒயரிலான கம்பி வலைகளை செடிகளில் கட்டி வன விலங்குகளை வேட்டையாட இருவர் முயற்சி செய்துள்ளனர்.



 

இதனை அறிந்த வனத்துறையினர் முயன்ற இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த  விசாரணையில் அவர்கள் இருவரும்  சேலம் மாவட்டம் சிவதாபுரம் அடுத்த  பெருமாம்பட்டி கணவாய்காடு கிராமத்தை சேர்ந்த அப்பாவு மகன் பூபதி (23) எனவும், மற்றொருவர் சேலம் மாவட்டம் சிவதாபுரம் வட்டம் பெருமாம்பட்டி அஞ்சல் கொத்தனூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் தியாகராஜன் (20) என தெரியவந்தது. இதனை தொடர்ந்து வன விலங்குகளை வேட்டையாட முயன்றதாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, தருமபுரி மாவட்ட வன அலுவலர் முன்  ஆஜர்படுத்தினர். இதனையடுத்து  வன விலங்குகளை வேட்டையாட முயன்ற  தியாகராஜன், பூபதி ஆகிய இருவருக்கும்  தலா  25,000 அபராதம் விதித்தனர்.