தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சித்தேரி மலைப் பகுதியில் சித்தேரி, சூரியகடை, பேரேரிபுதூர், சூளுக்குறிச்சி உள்ளிட்ட 64 மலை கிராமங்கள் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் அடர்ந்த வனப் பகுதியில் இருக்கும் மலை கிராம மக்கள் அருகில் உள்ள வனப் பகுதிகளில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சூரியகடைப் பகுதியில் கருங்கல் காப்புக்காடு பகுதியில், தலைமுறை தலைமுறையாய், வனப் பகுதியில் விவசாயம் செய்து வந்த மலைவாழ் மக்களுக்கு 2006 வன உரிமைச் சட்டத்தின்படி, மலைவாழ் மக்களுக்கு வன உரிமை வழங்கப்பட்டுள்ளது.

 



 

தொடர்ந்து அரூர் வனச்சரகர் உள்ளிட்ட வனத்துறை குழுவினர் சூரிய கடை பகுதியைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவருக்கு வனப் பகுதியில் 4 ஏக்கர் விவசாயம் செய்வதற்காக உரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ராஜம்மாள் என்பவரிடத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த இரண்டு ஏக்கர் வனப் பகுதியை வனத் துறையினர் மீட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினர். தொடர்ந்து அந்த இரண்டு ஏக்கர் வனப் பகுதியில் வேம்பு, புங்கன், மா, பலா, நாவல், கொய்யா  உள்ளிட்ட 250 பல வகை மரக் கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். மேலும் மலை பகுதியில் கடந்த இரண்டு மாத காலமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், தற்போது மரக் கன்றுகளை வனப் பகுதிகளுக்குள் வைத்து, வன விலங்குகள் அழிக்காத வகையில், குச்சிகளை நட்டு, பிளாஸ்டிக் பைகளில் பாதுகாப்பு வளையம் வைத்து பராமரிக்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மழை பெய்து வருகிறது. மேலும் பருவமழை தொடங்க உள்ள நிலையில், சித்தேரி மலையில் உள்ள வனப் பகுதிகளில் மரக் கன்றுகளை நடும் பணியை தொடர்ந்து வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 



 

மேலும் சித்தேரி மலையில் ஆக்கிரமிப்பில் உள்ள வனப் பகுதிகளை மீட்கும் பணியை அரூர் வனத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து வனப் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை அடையாளம் கண்டு விசாரணை செய்து, அதில் வன உரிமை சட்டத்தின் படி உரிமை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தால், நிலங்களை பராமரித்து வருபவர்களுக்கு வன உரிமை வழங்கப்படும். மேலும் மீதம் உள்ள வனப் பகுதிகளை மீட்டு, இந்த மழை காலத்திலேயே மரக் கன்றுகளை நட்டு வைத்து பராமரித்து, அதிகப்படியான மரங்களை உருவாக்க வேண்டும் என்று வன துறையினர் திட்டமிட்டுள்ளனர்.