வரும் 15 ஆம் தேதி முதல் ஏற்று கூலி இறக்கு கூலியை சரக்கு உரிமையாளரே ஏற்க வேண்டும் என்று சேலத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.



கொரோனா பரவல் காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக லாரி தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. படிப்படியாக இயல்பு நிலை தற்போது திரும்பிய போதிலும் பெரும்பாலான ஆலைகள் இயங்காத காரணத்தால் லாரிகள் அதிகம் இருந்தும் போதிய அளவில் சரக்கு போக்குவரத்து இல்லை என்கின்றனர் லாரி உரிமையாளர்கள். இந்தநிலையில்  சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி, லாரி உரிமையாளர்களின் வருவாய் இழப்பை சமாளிக்கும் நோக்கில் செலவினங்களை குறைக்க ஆலோசிக்கப் பட்டதாகவும், அதன் அடிப்படையில்  ஏற்று கூறி இறக்கு கூலி உள்ளிட்ட அனைத்து விதமான படிகளையும், சரக்கு உரிமையாளர்களே ஏற்க வேண்டும் என்ற கூலிமாற்ற முறை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்தார். தமிழகத்தில் லாரிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப சரக்கு போக்குவரத்து இல்லாத காரணத்தால் வாடகை உயர்த்த முடியாத நிலையில் இந்த கூலி மாற்ற முறை வரும் 15 ஆம் தேதி முதல்  அமல்படுத்தப்படுவதாகவும்,  இந்த முறையில் இனி எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.



மேலும், திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல் டீசல் விலையை குறைக்க முதலமைச்சர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாகவும், இந்த விலை குறைப்பு தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளதாகவும் குமாரசாமி தெரிவித்தார்.



தமிழகத்தில் பயோ டீசல்  என்ற பெயரில் கலப்பட டீசல் விற்பனை கட்டுப்படுத்த பட்டுள்ளதாகவும், ஏதேனும் பகுதியில் கலப்பட டீசல் பழக்கம் இருந்தால்  அதை தடுக்க துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் சுங்கச்சாவடி கட்டணங்களை குறைக்க வேண்டும் என்றும் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தினர். இது தொடர்ந்து பேசிய தமிழ்நாடு ஏற்றுமதி இறக்குமதி சங்கத்தினர்,  லாரி உரிமையாளர்கள் சங்கம் எடுத்துள்ள இந்த முடிவிற்கு வரவேற்பு அளிப்பதாகவும், இதன் மூலம் லாரி ஓட்டுனர் முதல் லாரி உரிமையாளர்கள் வரை பயனடைவர் என்றும் கூறினார். தற்போதுள்ள நிலையில் 4 லட்சம் லாரிகளில் வெறும் மூன்று லட்சம் லாரிகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்த பட்டால் அனைத்து ஆலைகளும் இயங்கும் பட்சத்தில் மீதமுள்ள ஒரு லட்சம் லாரிகள் இந்தியா முழுவதும் லாரிகள் இயக்கப்படும் என்று கூறினர்.