தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்புறங்களுக்குள் நுழைந்து வருகிறது. இதில் தேன்கனிக்கோட்டை ,பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி, பெண்ணாகரம், பாப்பாரப்பட்டி போன்ற பகுதிகளில் யானைகள் படையெடுத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக இரண்டு யானைகள் விவசாய நிலங்களை துவம்சம் செய்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு மக்கா யாணையை கும்கி யானை துணையுடன் வனத்துறையினர் பிடித்துச் சென்றனர்.
இந்நிலையில் பாலக்கோடு அருகே மணியக்காரன்கொட்டாய் பகுதியில் இரண்டு குட்டிகள் உட்பட ஐந்து யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப் புறத்தில் நுழைந்துள்ளது. அப்பொழுது அருகில் உள்ள ஜெர்த்தலாவ் பெரிய ஏரியில், தண்ணீர் இருப்பதைக் கண்ட யானைகள் ஏரியில் உள்ள தண்ணீரில் இறங்கியது. இதனை தொடர்ந்து குட்டிகள் உட்பட 5 காட்டு யானைகளும் ஏரியில் உள்ள தண்ணீரில் ஆனந்தமாய் குளியல் போட்டுக் கொண்டு மகிழ்ந்தது. தொடர்ந்து பெரிய காட்டு யானைகளுடன், குட்டிகள் ஏரியில் உள்ள நீரில் குளியல் போட்டு கும்மாளமிடும் காட்சியை அவ்வழியாக சென்றவர்கள் கண்டு ரசித்தனர். ஆனால் நான்கு மாதமாக சுற்றித் திரிந்த யானையை நேற்று முன்தினம் வனத் துறையினர் பிடித்துச் சென்ற நிலையில், தற்போது மீண்டும் ஐந்து யானைகள் வந்திருப்பது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து பாலக்கோடு வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கோடு வனத் துறையினர் யானைகள் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் இந்த யானைகளால் பொதுமக்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லாது இருப்பதால், அதனை விரட்டாமல் யானைகள் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பாலக்கோடு பகுதியில் விவசாய நிலங்களை நாசம் செய்த யானையைப் பிடித்துவுடன் மகிழ்ச்சி அடைந்த பொது மக்களுக்கு, ஐந்து யானைகள் வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த ஐந்து யானைகளையும், உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமப் புறங்களில், விவசாய நிலங்களுக்குள் நுழைய விடாமலும் வனப் பகுதிக்கு விரட்டுவதற்கு வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக இரண்டு யானைகள் விவசாய பயிர்களை அழித்தது போல் இல்லாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வனத் துறையினர் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.