சேலம் மாவட்டம் உடையாப்பட்டி ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் சேலம் தாதகாப்பட்டி சார் பதிவாளர் அலுவலகமும் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் சார் பதிவாளராக செல்வபாண்டி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சேலம் மாவட்டம் கொழிஞ்சிப்பட்டி பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரது அம்மாவின் நிலத்தை தான செட்டில்மெண்ட் செய்வதற்காக, இடைத்தரகர் கண்ணன் என்பவர் மூலமாக 50 ஆயிரம் பணத்தை சார்பதிவாளர் செல்வபாண்டியிடம் வழங்கியுள்ளார். அப்போது கண்காணித்துக் கொண்டிருந்த சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினர் கையும் களவுமாக செல்வப்பாண்டி மற்றும் இடைத்தரகர் கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று, சேலம் மாவட்டம் வேம்படிதாளம் துணை மின் நிலையம் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு உதவி பொறியாளர் அலுவலகம் இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட கே.கே நகர் பகுதியில் இயங்கி வருகின்றன. விசைத்தறி, விவசாய, வீடு, கடைகள் உள்ளிட்ட மின் இணைப்பு பெற வரும் பொது மக்களிடம் அதிகம் லஞ்சம் வாங்குவதாக தொடர் புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் கே.கே நகர் மின் வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் ஜெயக் குமார் (போர்மேன்) என்பவர் மின் இணைப்பு பெற வரும் நபர்களிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்