பெங்களூரில் இருந்து சேலம், தருமபுரி வழியாக கோயம்புத்தூர், கேரளா மார்கத்தில் தென்மேற்கு ரயில்வே சொந்தமான ரயில் பாதை அமைந்துள்ளது. இந்த ரயில் பாதைகளில் சாலை போக்குவரத்து குறுக்கிடும் இடங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தண்டவாளம், ஸ்லீப்பர் கற்கள், ஜல்லி கற்கள் உள்ளிட்டவற்றை மாற்றி பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவது வழக்கம். இந்நிலையில் தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி ரயில் நிலையம் அருகே வெள்ளி சந்தை முதல் பஞ்சப்பள்ளி வரை செல்லும் பிரதான சாலை ரயில் தண்டவாளத்தில் குறுக்கே செல்கிறது. இந்நிலையில் இந்த ரயில் தண்டவாளத்தின் குறுக்கே சாலை அமைந்துள்ள பகுதிகளில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இன்று முதல் மூன்று நாட்களுக்கு இந்த சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழியாக செல்கின்ற பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் மாற்று பாதையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இன்று காலை முதல் ரயில் தண்டவாளம் மற்றும் ஸ்லீப்பர் கற்கள், ஜல்லி கற்கள் மாற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் வரும் பொழுது ரயில்கள் மிகக் குறைந்த வேகத்திலேயே இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், வெள்ளி சந்தையில் இருந்து மாரண்டஅள்ளி செல்பவர்கள் வட்டகாணம்பட்டி வழியாக செல்கின்றனர்.‌ இந்த சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், வெள்ளிச் சந்தை முதல் மாரண்டஹள்ளி வரை உள்ள கிராமங்களுக்கு பேருந்துகள் செல்லாத நிலை இருந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.



 

தருமபுரியில் போலியான பத்திர பதிவு செய்ததை ரத்து செய்ய கோரி, ஒருங்கிணைந்த பத்திர பதிவுத் துறை அலுவலகம் முன்பு  குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம்.

 

தருமபுரி மாவட்டம் திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த  வேடியப்பன் விவசாயி கூலி தொழில் செய்து வருகிறார்.  வேடியப்பனுக்கு சிக்கலூர் பகுதியில் 3 ஏக்கர் நிலம் இருந்துள்ளது.  இந்நிலையில் இவருக்கு தெரியாமல் அரூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மோசடி செயலில் ஈடுபட்டு போலியான ஆவணங்கள் மூலம் கடந்த 2020 ஆம் ஆண்டு போலியான நபர்களையும் வைத்து பத்திர பதிவு செய்து விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த போலியான பத்திரப்பதிவு ரத்து செய்யக்கோரி அரூர் பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இவர்களின் புகார் மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.



 

 இந்நிலையில் இன்று வேடியப்பன் தங்கள் குடும்பத்தாருடன் தருமபுரி ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் அரசு அலுவலர்களை கண்டித்து கையில் பதாகைகள் ஏந்தியும், முழக்கங்களை எழுப்பினர். மேலும் தங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அலுவலகம் முன்பு தீக்குளிப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தனர். இதனை அறிந்த

தருமபுரி நகர காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழ உங்களுடைய ஆவணங்களை வழங்குங்கள் அதன் பேரில் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கபடும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து வேடியப்பன் குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் தருமபுரி பத்திர பதிவு அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.