சேலம் மாவட்டம் அரியானூர் அருகே உள்ள வி.ஐ.பி. நகரை சேர்ந்தவர் இனோஜ் சேவியர். இவர் சென்னையில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஆர்த்தி மரியா. இவர் அரியானூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர்கள் கடந்த 12 ஆம் தேதி மாலை கோவையில் உள்ள தங்களது தோட்டத்தில் பொங்கல் விழாவை கொண்டாடுவதற்காக வீட்டை பூட்டிவிட்டு அங்கு சென்றனர். அங்கு பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்தனர்.
அவர்கள் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இனோஜ் சேவியர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை, 50,000 ரொக்கம், அமெரிக்கா, சிங்கப்பூர் டாலர்கள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து இனோஜ் சேவியர் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஆட்டையாம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இந்த கொள்ளை நடந்த வீட்டின் அருகில் வசிக்கும் மருத்துவர் அருண் பாலாஜியின் வீட்டுக்குள் கடந்த 13 ஆம் தேதி இரவு புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த அவரது மனைவியான மருத்துவர் அஸ்வதி மற்றும் அவரது இரு மகன்களை மிரட்டி அங்கிருந்த 8 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றனர். எனவே அன்றைய தினம் இரவே பூட்டி இருந்த வழக்கறிஞர் இனோஜ் சேவியர் வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் 5 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு, பிறகு மருத்துவர் அஸ்வதி வீட்டில் கொள்ளையடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்துள்ள 2 வீடுகளில் மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அரியானூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.