திமுகவை சேர்ந்த மாரண்டஹள்ளி பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி, திமுக உறுப்பினர்களே, பேரூராட்சிகள் உதவி இயக்குனரிடம் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவராக திமுகவைச் சார்ந்த வெங்கடேசன் செயல்பட்டு வருகிறார். இதில் திமுக, அதிமுக என 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், கழிவுநீர் கால்வாய், மின்சாரம், சாலை உள்ளிட்ட வசதிகளை செய்து தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் வார்டு பகுதியை சேர்ந்த மக்கள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி தலைவர் வெங்கடேசனிடம் தங்களது வார்டு பகுதி மக்களின் குறைகளை தீர்க்க வேண்டும். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவுநீர் கால்வாய், சாலை, குடிநீர் உள்ளிட்டவைகளை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் உறுப்பினர்களின் கோரிக்கைக்கு செவி மடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பலமுறை பேரூராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்ட மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் மீது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பு இல்லை என்ற நம்பிக்கையை இழந்தனர். இதனால் திமுகவைச் சார்ந்த 11 பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொது மக்களுக்கு சேவை செய்ய தவறிய பேரூராட்சித் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என தருமபுரி மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் குருராஜனிடம் புகார் மனு அளித்தனர். இந்த புகார் மனுக்களை பெற்றுக் கொண்ட உதவி இயக்குனர் குருராஜன் ஒரு வார காலத்திற்குள்ளாக நேரடியாக பேரூராட்சி அலுவலகத்தில் வந்து தலைவரிடம் விசாரணை நடத்தி அதன் பிறகு உரிய தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி திமுக பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என திமுக பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.